மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 மா 2018

ஆஸ்கர்: நையாண்டிக்காரன் ‘ஜிம்மி கிம்மெல்’ அராஜகங்கள்!

ஆஸ்கர்: நையாண்டிக்காரன் ‘ஜிம்மி கிம்மெல்’ அராஜகங்கள்!

சிவா

நையாண்டி செய்வதற்குச் சாதுர்யம் அவசியம். நையாண்டிக்குள்ளானவர் எதிரே நின்றிருந்தாலும், அவராலும்கூட எதிர்வினையாற்ற முடியாதபடி வார்த்தைகளைக் கோத்து வடிகட்டிப் பேசுவது அதில் கரைகண்டவர்களால் மட்டுமே சாத்தியப்படக்கூடியது. இப்படித்தான் கடைசி ஆஸ்கர் விழாவில் பலரையும் வம்புக்கிழுத்த ஜிம்மி கிம்மெல் (Jimmy Kemmel) இந்த வருட ஆஸ்கர் விழாவின் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இதில் அவருக்குச் சவாலான பல மாற்றங்கள் இருந்தன. கடைசி வருடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ‘நிறக்கொள்கை’ முழு வடிவம் பெற்றிருக்கவில்லை; பாலியல் தொல்லையில் ஹார்வே வெய்ன்ஸ்டீன் சிக்கவில்லை; அதிக ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் பங்களித்த படங்கள் ஆஸ்கர் மேஜையில் இடம்பெறவில்லை; இப்படியாக பல சவால் நிறைந்த சர்ச்சைகளுடன் மேடைகண்ட ஜிம்மி கிம்மெல் என்ன செய்தார் என்பதைப்பற்றிய பார்வையே இந்தக் கட்டுரை.

“உங்கள் பெயர் இந்த மேடையில் அழைக்கப்பட்டால், உடனே எழுந்திருக்க வேண்டாம். ஒரு நிமிடம் பொறுமையாக இருங்கள். சென்ற வருடம் போல இந்த வருடமும் ஒரு தவறு நடைபெற நாங்கள் விரும்பவில்லை” என்று பேசி ஆஸ்கர் நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொடங்கியபோது சிரிப்பொலியும், கரவொலியும் மங்கள வாத்தியங்களாக இசைக்கத் தொடங்கின. தனது 90ஆவது நிகழ்ச்சியை கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மையத்தில் இடம்பெற்றுள்ள ஹாலிவுட் தியேட்டரின் டால்பி தியேட்டரில் நடத்தியது Academy of Motion Picture Arts and Sciences. ஹார்வே வெய்ன்ஸ்டீன் முதல் ஹாலிவுட்டில் நிலவும் சம்பள வேறுபாடு, பாலியல் தொல்லைகள், ஆணாதிக்கம், டொனால்டு ட்ரம்ப் வரை தற்போதைய அத்தனை பிரச்சினைகளையும் தன்னுரையிலேயே பேசிவிட்டார்.

ஜிம்மி கிம்மெல் போல ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரை உலகம் கண்டு பல வருடங்கள் ஆகின்றன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். சென்ற வருடம் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை மாற்றி அறிவித்ததில் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்தே தனது சொற்போரைத் தொடங்கினார் ஜிம்மி கிம்மெல். விருது மாற்றி அறிவிக்கப்பட்டதற்கு, விழா ஏற்பாட்டைக் கவனித்துக்கொள்ளும் ப்ரைஸ்வாட்டர்ஸ் கூப்பர்ஸ் (PricewaterhouseCoopers - PWC) நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பையும் கேட்டது. அத்துடன் ‘இனி வரும் காலங்களில் சரியான உரைகளை கொடுப்பதில் கவனம் செலுத்துவோம்’ என்றும் கூறியிருந்தது. இந்த வருடமும் ஆஸ்கர் நிகழ்ச்சியை அந்த நிறுவனமே நடத்தினாலும், “இனிமேல் கவனம் செலுத்துவீர்கள் என்றால், 89 வருடங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்” என்று ஜிம்மி கிம்மெல் கேட்டது நையாண்டித்தனத்தின் உச்சம்.

“1929இல் முதல் ஆஸ்கர் விழாவில் சிறந்த படத்துக்கான விருது இரண்டு படங்களுக்கு வழங்கப்பட்டன. 88 வருடங்கள் கழித்துச் சென்ற வருடம் அதே நிகழ்வு நடைபெற்றது. ஆனால், இன்று அப்படி நடைபெறவிட்டுவிடக் கூடாது என்பதற்கே ஒரு குழு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியைக் கொடுப்பதாக உறுதியளிக்கிறேன்” என்று சென்ற வருட சர்ச்சையை முடித்துவிட்டுப் பாலியல் தொல்லை பற்றித் தொடங்கினார்.

“நம் நண்பர் ஆஸ்கர் நல்லவர். அவருக்கு 90 வயதாகிறது. அதனால், அவர் வீட்டிலமர்ந்து ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் இந்நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். இதோ அவர் நம்முடன் இங்குதான் இருக்கிறார். ஹாலிவுட்டில் அதிகம் மதிக்கப்படும் நபர் அவர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அவர்தான் நம்பர் ஒன். ஏனென்றால், அவருக்குத் தன்னுடைய எல்லை எதுவென்பது தெரியும். அங்கே பாருங்கள், கைகள் நமக்குத் தெரியும் இடத்தில் இருக்கின்றன. ஒரு வார்த்தைகூடத் தவறாகப் பேச மாட்டார். முக்கியமாக அவருக்கு ஆண் உறுப்பு இல்லை. அவர் தனது எல்லைகளுக்குட்பட்டவர். இப்படிப்பட்ட ஆண்கள்தான் நமக்கு இப்போது தேவை” என்று ஹாலிவுட்டில் பணிபுரியும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களை மறைமுகமாகத் தாக்கினார்.

கிம்மெலின் இந்தப் பேச்சு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றத்தைக் கொடுத்த ஒன்று. காரணம், பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் பெயர்கள் ஆஸ்கர் மேடையில் பதிவு செய்யப்பட்டு, 90 வருட வரலாற்றின் ஒரு பாகமாக ஆவணப்படுத்த ஆஸ்கர் அரசியல் இடம்கொடுக்காது என்று ஒரு தரப்பினர் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை மேற்கண்ட வாக்கியங்களின் மூலம் கிம்மெல் உறுதிப்படுத்தினார். ஆனால், விரைவிலேயே வெளிப்பட்டது அவரது உண்மைப் பேச்சு.

“ஹாலிவுட், பெண்களைப் பற்றி எத்தனை தெளிவில்லாமல் இருக்கிறது என்பதை, ‘What Women Want’ என்ற திரைப்படத்தில் மெல் கிப்சனை நடிக்கவைத்ததிலிருந்தே அறிய முடியும். இது நீங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது” எனக் கூறிப் பெண்களை எப்போதும் கீழ்த்தரமாகப் பேசும் மெல் கிப்சனைப் போகிற போக்கில் வம்புக்கிழுத்த பின் நேராக ஹார்வே வெய்ன்ஸ்டீனிடம் சென்றார். “நீங்கள் இடம்பெற்றுள்ள இந்த அகாடமி, சென்ற வருடம் ஹார்வே வெய்ன்ஸ்டீனை அனைத்துப் பதவிகளிலிருந்தும் இறக்கியது. இவரைப் போலவே இதற்கு முன்பு ஒரே ஒருவர் அகாடமியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் என அறிந்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆஸ்கரில் பங்கெடுக்கக் கொடுக்கப்பட்ட Seabiscuiton திரைப்படத்தின் ஒரு காப்பியை நண்பருக்குக் கொடுத்ததற்காக ஒருவர் அகாடமியிலிருந்து நீக்கப்பட்டார்” என்று இந்தத் தலைமுறை சினிமா ஆர்வலர்கள் பலரும் அறியாதத் தகவலை நினைவூட்டினார். காட்ஃபாதர் திரைப்படத்தில் துணை நடிகராக இடம்பெற்ற கார்மைன் காரிடி Carmine Caridi என்பவர் 2004, பிப்ரவரி 3ஆம் தேதி அகாடமியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த 89 வருடங்களில் இந்த அகாடமி தனக்கு வரும் படங்களைப் பாதுகாக்க எடுத்த நடைமுறைகளைக்கூட அதில் இடம்பெற்றிருக்கும் பெண் கலைஞர்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கவில்லை என்பதைக் கூறிய பின் வெய்ன்ஸ்டீன் சங்கதி என்னவானது என்பதை விளக்கினார்.

“வெய்ன்ஸ்டீன் நீக்கப்பட்டதுடன் எல்லாம் முடிந்துவிடவில்லை. இவை இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த உலகம் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இங்கு நாம் வெற்றிபெற்றால்தான், இங்கு நடைபெறும் பாலியல் தொல்லைகளை நிறுத்தினால்தான் வெளியில் செல்லும்போதெல்லாம் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இந்த மாலைப்பொழுதில், தைரியமான, வெளிப்படையாகப் பேசக்கூடிய பலரது வார்த்தைகளை நாம் கேட்கப்போகிறோம். ஏனென்றால், அவர்கள் செய்வது அத்தனை முக்கியமான ஒன்று. பிளாக் பாந்தர் மூலம் நசுக்கப்பட்டாலும், தற்போதைய ஒன்றிணைவின் மூலம் ஒவ்வொரு நாளும் ரிலீஸாகி வெற்றிபெறும் தன்னிகரற்ற திரைப்படங்களுக்கு வெளிச்சம் கொடுக்கப் போகிறோம்” என்று வசூலில் பல சாதனைகள் படைத்து வரும் பிளாக் பாந்தர் படத்தையும் ஆதரவுக்கு எடுத்துக்கொண்டார்.

“கடந்த ஒரு வருடத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் பிளாக் பாந்தர் மற்றும் வொண்டர் வுமன். பெண்களையும், சிறுபான்மை மக்களையும் ஆதாரமாக வைத்து ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒரு காலம் இருந்தது. ஆனால், இப்போது நிறைய மாறிவிட்டதுடன் கொண்டாடுவதற்கான காரணங்களும் அதிகரித்துவிட்டன” என்று அடுத்தடுத்த தலைப்புகளுக்கு மாறினார்.

“இங்கிருந்த எல்லாத் தடைகளும் உடைக்கப்பட்டுவிட்டன. ஒளிப்பதிவாளர் பிரிவில் முதல் பெண் பரிந்துரை இவ்வருடம் இடம்பெற்றிருக்கிறது. கடந்த எட்டு வருடத்தில் இயக்குநர் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட பெண்ணாக கிரெடா கெர்விக் இருக்கிறார்” என்று பெருமைகளை அடுக்கிக்கொண்டே வந்தவர், “இதில் முக்கியமானது என்னவென்றால், ஹாலிவுட்டில் உருவான படங்களில் 11 சதவிகிதம் மட்டுமே பெண்களால் படைக்கப்பட்டவை” என்ற கசப்பான உண்மையையும் சொல்லத் தயங்கவில்லை.

“இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டிய தேவையிருக்கிறது. சம்பளத்திலேயே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது” என்று கூறி, அதற்கான உதாரணமாக மார்க் வால்பெர்க் மற்றும் மிச்செல் வில்லியம்ஸின் கதையைக் கூறினார். ரிட்லே ஸ்காட் இயக்கத்தில் உருவான ‘All the Money in the World’ திரைப்படத்தின் பவுல் கெட்டி கேரக்டருக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கெவின் ஸ்பேசி. அவர்மீது தொடர்ந்து வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளினால் அவருக்கு பதிலாக கிறிஸ்டோஃபர் பிளம்மர் சேர்க்கப்பட்டார். எனவே, கெவின் நடித்திருந்த அத்தனை காட்சிகளையும் திரும்பவும் படமாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் ரிட்லே ஸ்கார். ரீஷூட்டிங்குக்காக அழைக்கப்பட்டபோது வில்லியம்ஸுக்கு ஆயிரம் டாலர்களையும், மார்க் வால்பெர்குக்கு ஒன்றரை மில்லியன் டாலர்களையும் சம்பளமாக வழங்கியது தயாரிப்பு நிறுவனம். இதற்கு எதிராக ஹாலிவுட்டில் உருவாகியிருக்கும் Metoo மற்றும் Time's Up அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க, மார்க் வால்பெர்க் தனது சம்பளப் பணத்தை ஹாலிவுட்டில் பாலியல் தொல்லைக்கு எதிராகப் பேசும் இந்த அமைப்புகளுக்கு நிதியாக வழங்கினார்.

ஜிம்மி கிம்மெலின் பேச்சு முழுவதுமே, 89ஆவது ஆஸ்கர் முடிந்ததிலிருந்து 90ஆவது ஆஸ்கர் தொடங்கியது வரை நடைபெற்ற சம்பவங்கள், அவற்றின் தாக்கம் ஏற்படுத்திய பின்விளைவு, தீர்வு ஆகியவற்றை நோக்கியதாகவே இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதற்கு ஆஸ்கர் எப்படி அனுமதி கொடுத்தது என்ற கேள்வி ஜிம்மி கிம்மெலின் பேச்சு மிகவும் காத்திரமாக அதேசமயம் நகைப்புச் சுவை மாறாமல் சென்றபோது ஏற்பட்டது. ஆனால், எல்லா நிகழ்வுகளையும் ஒன்றுக்கொன்று தொடர்பாகப் பிசிறில்லாமல் பேசியதால் அவரால் அத்தனை இலகுவாய் அனைவரையும் கவர முடிந்தது.

ஆஸ்கர் அரசியல், ஹாலிவுட் அரசியலுடன் மட்டும் ஜிம்மி கிம்மெல் நிற்கவில்லை. கடைசியாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார். “Get Out திரைப்படத்தின் இயக்குநர் ஜோர்டன் பீலே தனது அறிமுகப் படத்திலேயே ஆஸ்கர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த 90 வருடத்தில் இவர் மூன்றாவது நபர். எப்படிப்பட்ட வெற்றி இது பார்த்தீர்களா? இது எப்படிப்பட்ட வெற்றியென்றால், இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் சிறந்தது என்று ட்ரம்ப் பாராட்டும் அளவுக்குச் சிறந்த படம்” என்று ட்ரம்ப் பக்கம் சென்றார். நிறவெறிக்கு எதிரான திரைப்படமாக உருவாகியிருக்கும் Get Out கிட்டத்தட்ட ட்ரம்ப் அரசியலின் வெளிப்பாடாகவே இருந்தது. எனவேதான் அந்தப் படத்தை ட்ரம்புடன் சேர்த்துப் பேசினார்.

அடுத்து, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராகப் பேசிவரும் துணை ஜனாதிபதிக்கு ஓர் அம்பு. “இங்கே உட்கார்ந்திருக்கும் டிமோதி சால்மெட்டைப் பாருங்கள். இவர்தான் கடந்த 80 வருடங்களில், சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இளம் நடிகர். இவர் நடித்த Call me by your Name, ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டவற்றில் 100 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த படங்களில் ஒன்று. ஆனால், நாம் பணத்துக்காகப் படமெடுப்பதில்லைதானே டிமோதி? நாம் படமெடுப்பது மைக் பென்ஸ் போன்றோருக்காகத்தானே படமெடுக்கிறோம்” என்று கேட்டு தொடர் சிரிப்பலைகளின் மூலம் அரங்கிலிருந்தவர்களை உற்சாகத்தின் விளிம்புக்கே கொண்டுசென்றார்.

கடைசியாக வந்து நின்றது The Shape of Water திரைப்படத்திடம். சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற இத்திரைப்படத்துக்கு கிம்மெல் கொடுத்த விளக்கம் அபரிமிதமானது. “இந்தப் படத்தை இயக்கிய கியுலெர்மோ டெல் டோரோ ஒரு சிறந்த மனிதர். இவரை வாழ்நாளில் நாங்கள் மறக்கவே மாட்டோம். ஆண்கள் மிகவும் பாதிக்கப்பட்ட ஆண்டாக இதை நாங்கள் நினைவில்கொள்வோம். பெண்கள் மீனைக் காதலிப்பதுபோல படமெடுத்து எங்களது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டார்” என்று கிம்மெல் சொன்னதுதான் தாமதம், அரங்கு முழுவதிலுமிருந்து மேடையை நோக்கிவந்த கரகோஷ ஒலிகள் அவருக்குச் சில முத்தங்களையும் கொண்டுசேர்த்தன.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

செவ்வாய் 6 மா 2018