மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

மன்னிப்பு கேட்ட தேர்தல் ஆணையம்!

மன்னிப்பு கேட்ட தேர்தல் ஆணையம்!

குறிப்பிட்ட காலத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாததற்கு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் பலமுறை அவகாசம் கோரிய நிலையில், இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்த வழக்கில், “உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். இதற்கான அறிவிக்கையை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிமன்றம், தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கடந்த 7ஆம் தேதி தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தொடர்ந்து 10ஆம் தேதி மீண்டும் நடைபெற்ற இந்த வழக்கில், “மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் இருவரும் நேரில் ஆஜராகிவிட்டதால் இனி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் நவம்பர் 14 அன்று மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்தச் சூழ்நிலையில் நேற்றைய தினம் (நவம்பர் 13) தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோரின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை, தொகுதி மறுவரையறை செய்வதற்காகப் பயிற்சியளிக்கும் பணி நிறைவு பெற்று, மறுவரையறை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை குழுவின் ஐந்தாவது கூட்டம் நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ள அந்த மனுவில், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என்ற எவ்வித உள்நோக்கமும் தங்களுக்கு இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தல் பணிகளைத் தொடங்கி தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்காதது குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இன்று தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள நிலையில், இவ்வாறு மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று நடைபெறும் விசாரணையில் மனு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 14 நவ 2017