2022-ம் நிதியாண்டில் மொத்தம் 3,800 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில் நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்க துறை சார்பில் 2,000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் அதிக அளவில் தங்க இறக்குமதி நடைபெறுகிறது. எனினும், ஆண்டுதோறும் நாட்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கங்களின் அளவும் அதிகரித்து வருகிறது.
இதன்படி, நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்க துறை சார்பில் 2,000 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேபாளம் மற்றும் மியான்மர் எல்லைகள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022-ம் ஆண்டில் நாட்டில் அதிக அளவாக கேரளாவில் 755.81 கிலோ தங்க கடத்தல் நடந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து மராட்டியம் 535.65 கிலோ மற்றும் தமிழகம் 519 கிலோ தங்கம் கடத்தல் நடந்துள்ளது.
2022-ம் ஆண்டில் 3,982 தங்கம் கடத்தல் வழக்குகளும், அதற்கு முந்தின 2021-ம் ஆண்டில் 2,445 தங்கம் கடத்தல் வழக்குகளும் பதிவாகி இருந்தன.
இந்த தங்கம் கடத்தலுக்கான காரணம் குறித்து பேசியுள்ள அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்,
“2021-2022 நிதியாண்டில் இந்தியா சுமார் 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இப்படி இறக்குமதி அதிகரிக்கும்போது தங்கம் கடத்தலும் அதிகமாகத்தான் இருக்கிறது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் நலிவடைந்து பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அதனால் பணம் ஈட்ட சுலபமான வழி தங்கம் கடத்தல் என்று இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
வெளிநாட்டு சந்தை மற்றும் இந்திய சந்தையின் தங்க விலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிக வித்தியாசம் இருப்பதாலும், கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற தங்கம் சிறந்த வழி என்பதாலும், தங்கம் இறக்குமதி வரி அதிகமாக இருப்பதாலும் அதிக அளவு தங்கம் கடத்தல் இந்தியாவில் நடக்கிறது.
தங்கம் கடத்தலுக்கு முக்கிய காரணமே இந்தியாவில் குறிப்பாக, தென்னிந்தியாவில் தங்கத்துக்கு உள்ள அதிக ஈர்ப்பு என்றுகூட சொல்லலாம்.
தங்கம் கடத்தல் என்பது சட்டத்துக்குப் புறம்பான வர்த்தகம் என்பதால் அரசுக்கு வர வேண்டிய வரி மற்றும் வருமானம் வெகுவாகக் குறைகிறது.
மேலும், இது இந்திய ரூபாயின் மதிப்பைக்கூட பாதிக்கிறது. இதில் மத்திய நிதியமைச்சர் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார்கள்.
ராஜ்
ஐ.நா. அதிகாரிகளுக்கு விசா மறுத்த இஸ்ரேல்: அப்படி என்ன பேசினார் ஐ.நா. பொதுச் செயலாளர்?
டிஜிட்டல் திண்ணை: ஆளுநரை எதிர்க்கத் தயக்கம்: ஸ்டாலின் ஸ்கெட்ச்சில் சிக்கிய எடப்பாடி
