கோவை வழியாக சரக்கு வாகனத்தில் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சரக்கு வாகனம் ஒன்றில் கல் குவாரிகளில் பயன்படுத்துவதற்காக சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகள் கொண்டு செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கோவை மதுக்கரை பகுதியில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறிய ரக வாகனத்தில் 2000 கிலோ (2 டன்) அளவிற்கு ஜெலட்டின் குச்சிகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
சுமார் 15,000 குச்சிகள் இருந்த இந்த வாகனத்தை கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சுபேர் என்பவர் ஓட்டி வந்தார். இதையடுத்து காவல் துறையினர் சுபேரை கைது செய்து ஜெலட்டின் குச்சிகள் இருந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தீவிரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான குழு அதிகாலை 4 மணியளவில் அந்த வாகனத்தைப் பிடித்து மதுக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது.
தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஜோசப் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மதுக்கரை போலீசார் ஜெலட்டின் குச்சிகளுடன் வந்த வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து காவலர்கள் வெடி பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை ஓட்டி வந்த சுபேரின் பின்னணி என்ன? எந்த காரணத்திற்காக ஜெலட்டின் குச்சிகள் கடத்தி செல்லப்பட்டது. எங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
காவல்துறையினர் விசாரணையில் சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு சட்டவிரோத சுரங்க பணிகளுக்காக வெடிபொருட்களை கொண்டு சென்று சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மதுக்கரை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு , வெடிமருத்து கொண்டு வரப்பட்ட வாகனத்தில் இருந்த வெடிபொருட்களை பரிசோதனை நடத்தி வருகின்றனர்.









