டெல்லியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட பங்களாவில் குடியிருக்கும் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி-க்களை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.
மக்களவை எம்.பி-க்கள், அமைச்சர்களுக்கு அரசு சார்பில் பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதத்துக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்களுக்கு வழங்கப்பட்ட பங்களாக்களை, திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
விதிகளின்படி, முந்தைய மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் முன்னாள் எம்.பி-க்கள் தங்களது அதிகாரபூர்வ பங்களாக்களை காலி செய்ய வேண்டும்.
ஆனால், இதுவரை 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி-க்கள், உரிய காலம் முடிந்தும் பங்களாக்களைத் திரும்ப ஒப்படைக்காமல் உள்ளனர்.
இவர்களுக்கு வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் அதிகாரபூர்வ பங்களாக்களை விரைவில் காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்) சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.பி-க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களை, விரைவில் காலி செய்யத் தவறினால் அதிகாரிகள் குழு, அவர்களை பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை செயலகம் எம்.பி-க்களுக்கு தங்குமிட வசதிகளை அளித்தாலும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், மத்திய அமைச்சர்களுக்கு டெல்லி லூடியன்ஸ் குடியிருப்பில் பங்களாக்களை ஒதுக்குகிறது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு, 83, லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பங்களா முன்பு, முன்னாள் மத்திய தகவல் ஆணையருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் எம்.பி-க்களுக்கு வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், எந்த ஒரு முன்னாள் மத்திய அமைச்சருக்கும் அதிக காலம் தங்கியதற்காக இதுவரை வெளியேற்ற நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஸ்மிருதி இரானி உள்பட நான்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கள் அதிகாரபூர்வ பங்களாவை காலி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: மொஹரம் பண்டிகை முதல் தங்கலான் பாடல் ரிலீஸ் வரை!
ஹெல்த் டிப்ஸ்: குழந்தை பிறப்புக்குப் பிறகு செக்ஸ் ஆர்வமின்மைக்குக் காரணம் என்ன?