2025-26 கல்வியாண்டில் உயர்கல்வியில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். 20 percent additional admission in government colleges
தமிழகத்தில் 186 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மே 27ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
2,15,809 மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஆனால், சுமார் 1,25,000 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இந்தநிலையில் விண்ணப்பித்து இடம் கிடைக்காமல் காத்திருந்த மாணவர்களுக்காக முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று (ஜூலை 7) வெளியிட்ட அறிவிப்பில் , ” புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதனால் கடந்த நான்காண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே மாணாக்கர் சேர்க்கை விகிதத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
இவ்வாண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணாக்கர்கள் விண்ணப்பத்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த முதலமைச்சர் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிவைத்தார்.
இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாணாக்கர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20% மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15% இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10% இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணாக்கர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தியும், முதலமைச்சர் ஏழை, எளிய கிராமப்புற மாணாக்கர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க அறிவித்துள்ள அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று பெற்றோர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து தங்களது வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார். 20 percent additional admission in government colleges
