கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தனியார் பேருந்து, சுற்றுலா டாக்ஸி தொழிலில் ஈடுபட்டுள்ள 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. பள்ளி, கல்லூரிகள், ஆலயங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதனால், தனியார் பேருந்துகள் மற்றும் சுற்றுலா டாக்ஸிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காமல் உள்ளன.
இதுகுறித்து இந்திய பேருந்து மற்றும் கார் ஓட்டுநர்களுக்கான கூட்டமைப்பு (பி.ஓ.சி.ஐ) வெளியிட்டுள்ள செய்தியில், “15 லட்சம் அளவுக்குத் தனியார் பேருந்துகள், மேக்ஸி கேப்கள் மற்றும் 11 லட்சம் சுற்றுலா டாக்ஸிகள் எங்களுடைய கூட்டமைப்பு சார்பில் இயங்கி வந்தன. இதனால் ஒரு கோடி பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, தனியார் பேருந்து மற்றும் சுற்றுலா டாக்ஸி தொழிலில் ஈடுபட்டு வந்த 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
எங்களது கூட்டமைப்பினருக்கு அரசின் ஆதரவு தேவையாக உள்ளது. எங்களில் பலர் இந்தத் தொழிலை விட்டு விட்டுச் செல்ல கூடிய சூழலில் உள்ளனர். அதனால் அவர்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
**-ராஜ்**
