கோவை அருகே வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட 2 ஆசிரியைகளை மீண்டும் தங்கள் பள்ளிக்கே மாறுதல் செய்ய வேண்டும் என்று அரசு பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பணியாற்றி வந்த கணக்குப்பதிவியல் ஆசிரியையாக சாந்தி என்பவரும், வேதியியல் ஆசிரியையாக சத்யா என்பவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இந்த 2 ஆசிரியைகளும் கடந்த சில நாட்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதையறிந்த அப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் 2 ஆசிரியைகளின் பணி மாறுதல் உத்தரவையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்ணம்பாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று (நவம்பர் 21) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆசிரியைகள் இருவரையும் பணியிட மாறுதல் செய்ய கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவ மாணவிகள், “பணியிட மாற்றம் செய்யப்பட்ட அந்த 2 ஆசிரியைகளையும் எங்கள் பள்ளிக்கே மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும். அந்த 2 ஆசிரியைகளும் எங்களுக்கு பாடத்தை தாண்டி வாழ்க்கை முறையை சொல்லிக் கொடுத்தனர். எங்களை மிகவும் அன்பாக நடத்தினர். பொது தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதனால் புதிதாக வரக் கூடிய ஆசிரியைகள் எங்களுக்கு நன்றாக பாடம் எடுத்தாலும் புரிந்து கொள்வது மிகவும் சிரமம். இதனால் எங்களுடைய கல்வி கற்கும் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதை வலியுறுத்திதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
