சென்னையில் ஒரே நாளில் 228 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத் தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றியை நிலைநாட்டுவதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. மற்றொரு பக்கம், மக்களுக்கு சட்டவிரோதமாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் நடவடிக்கையாக சென்னையில் ஒரே நாளில் 228 காவல் ஆய்வாளர்களை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக 112 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 116 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 49 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் பிற காவல் நிலையங்களுக்கும் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே இடத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், தேர்தல் காலங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணியிட மாற்ற உத்தரவுதான் இது என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே, தமிழகத்தில் உதவி காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 9 காவல்துறை உயரதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 17ஆம் தேதி உத்தரவிட்டது. அவர்களுக்குத் தேர்தல் சார்ந்த பணிகள் ஒதுக்கப்படக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டபேரவை பொதுத் தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக காவல் துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகள் செயல்படுகின்றனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை அளித்து அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
**வினிதா**