நெல்லையில் இன்று (அக்டோபர் 7) அதிகாலை விபத்தில் உயிரிழந்தவரை மீட்க வந்த ஆம்புலன்ஸும் விபத்தில் சிக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வழியில் குலவணிகர்புரம் ரயில்வே கேட் உள்ளது.
இந்த ரயில்வே கேட்டில் அடிக்கடி சாலை விபத்து நடப்பதால் இங்கு ஒரு ரயில்வே மேம்பாலம் வேண்டும் என பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை நெல்லையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றும் தெய்வநாயகம் என்பவர் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது அம்பையில் இருந்து நெல்லை நோக்கி வந்த லாரி மோதியதில் அவர் தண்டவாளத்திலேயே கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர போலீசார், தெய்வ நாயகத்தின் உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வர வைத்தார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜேபி தனியார் ஆம்புலன்ஸ் பாளையங்கோட்டை ரயில்வே கேட் அருகே மற்றுமொரு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஜேபி ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜே.பி. என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இருவரின் உடல்களும் பாளையங்கோட்டை குலவனிகர்புரம் ரயில்வே கேட் அருகே இருந்ததால் சிறிது நேரம் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேம்பாலம் அமைப்பதில் குளறுபடி , மற்றும் குறுகலான சாலை ஆகியவைகள் தான் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதற்கான காரணமாக அமைகிறது என்று பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
விபத்தில் இறந்தவரின் உடலை மீட்க வந்த ஆம்புலன்ஸும் விபத்தில் சிக்கி அதன் உரிமையாளர் பலியாகிய சம்பவம் நெல்லை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரவணன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Asian Games 2023: 100 பதக்கங்கள்… புதிய வரலாறு படைத்த இந்தியா!
