விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 167 பேர் +2 வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் அண்மையில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் டூ (+2) தேர்வு முடிவுகள் வெளியாகின. வேதியியல் பாடத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 3,181 மாணவ மாணவியர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றிய மாணவ, மாணவியரே மிக அதிக அளவில் வேதியியல் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 167 மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17 பேரும் செஞ்சி அல் ஹிலால் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 39 பேரும் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 பேரும் அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 16 பேரும் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 பேரும் என வேதியியலில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். மொத்தமாக செஞ்சி ஒன்றியத்தில் மட்டும் 251 பேர் வேதியியலில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்; வேதியியலில் 99 மதிப்பெண்களை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இப்படி செஞ்சி ஒன்றியத்தில் வேதியியல் பாடத்தில் மட்டுமே அதிகமான மாணவ மாணவியர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருப்பதுதான் சர்ச்சையாகி இருக்கிறது. வேதியியல் வினாத்தாள், செஞ்சி ஒன்றியத்தில் முன்கூட்டியே கசிந்ததா? என்ற கேள்வி எழுவதால் அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.