வென்றார் வெங்கையா!

Published On:

| By Balaji

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 5ஆம் தேதி நேற்று காலை 10 மணியளவில் தொடங்கி மாலை 5 மணியளவில் முடிந்தது. முதல் வாக்கைப் பிரதமர் நரேந்திர மோடி பதிவு செய்தார். பகல் 12 மணியளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்களித்தார். இதைத் தொடர்ந்து எம்.பி-க்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ADVERTISEMENT

கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார். கடந்த மாதம் 25ஆம் தேதி, ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இந்நிலையில், தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திமுடித்தது.

பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வெங்கையா நாயுடுவும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில், கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தி வைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

தேர்தலில் 98.21% வாக்குகள் பதிவாயின . மொத்தம் 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகியுள்ளன . திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உட்பட 8 எம்.பி-க்கள் வாக்களிக்கவில்லை. பாஜக, காங்கிரஸ், ஐயூஎம்எல் கட்சிகளின் தலா 2 எம்.பி-க்கள் வாக்களிக்கவில்லை.

அதில் கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளும், வெங்கையா நாயுடு 516 வாக்குகளும் பெற்றனர். 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். இவர், நாட்டின் 15ஆவது துணைக் குடியரசுத் தலைவரானார். இவர் குடியரசு துணைத்தலைவராக வரும் 11ஆம் தேதி பதவியேற்கிறார்.

ADVERTISEMENT

1949ஆம் ஆண்டு ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் வெங்கையா நாயுடு. B.A.,B.L., வரை படித்துள்ள இவர், கல்லூரி படிப்பின்போது ABVP அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1970-களில் அவசர நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். 1977 முதல் 1980 வரை ஜனதா கட்சியின் ஆந்திர மாநில இளைஞரணி தலைவராகப் பதவி வகித்தவர் வெங்கையா நாயுடு.

1978ஆம் ஆண்டு முதன்முறையாக ஆந்திரச் சட்டப்பேரவைக்கு உதயகிரி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1985ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ-வாக இருந்தார். 1980 முதல் 1985ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநில பாஜக தலைவராகப் பதவி வகித்தார். 1985 முதல் 1988ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலாளராக இருந்தார். 1993ஆம் ஆண்டு முதல் 2000 வரை பாஜக-வின் தேசியப் பொதுச்செயலாளராக வெங்கையா நாயுடு பதவி வகித்தார். 1998 முதல் மூன்று முறை கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2000 முதல் 2002ஆம் ஆண்டு வரை வாஜ்பாய் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை பாஜக-வின் தேசியத் தலைவர் பதவி வகித்தார். 2005ஆம் ஆண்டு பாஜக-வின் தேசிய துணைத் தலைவர் பதவியையும் வெங்கையா நாயுடு வகித்தார். 2014ஆம் ஆண்டு முதல் நகர்ப்புறம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற இவர் தனக்கு ஆதரவளித்த பிரதமர் மற்றும் அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், குடியரசுத் தலைவரின் கரத்தை வலுப்படுத்த பாடுபடுவேன் என உறுதி அளித்துள்ளார். இவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

**பிரதமர் நரேந்திர மோடி**

தேர்தலில் வெற்றிபெற்ற வெங்கையா நாயுடுவுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

**கோபாலகிருஷ்ண காந்தி (எதிர்க்கட்சி வேட்பாளர்)**

தேர்தலில் வெற்றிபெற்ற வெங்கையா நாயுடுவுக்கு என்னுடைய வாழ்த்துகள். மேலும், எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

**மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்)**

”குடியரசுத் துணைத் தலைவராக வெற்றிபெற்றுள்ள வெங்கையா நாயுடுவுக்குத் தலைவர் கருணாநிதி சார்பிலும், திமுக சார்பிலும் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற நடைமுறைகளில் பழுத்த அனுபவம் பெற்றுள்ள வெங்கையா நாயுடு நாட்டின் பன்முகத்தன்மைக்குப் பாதுகாவலராகவும், மாநிலங்களவையின் உயர்ந்த மாண்புகளை நிலைநாட்டவும் பாடுபடுவார் என்று மனதார நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

**பன்னீர்செல்வம் (முன்னாள் முதலமைச்சர்)**

பல ஆண்டு அரசியலில் அனுபவம் உள்ளவர் வெங்கையா நாயுடு. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

**தமிழிசை சௌந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்)**

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மேலவை நிகழ்வுகளை நடத்திச்செல்லும் சவாலான பணிக்கு வெங்கையா நாயுடு ஏற்ற தலைவர் என்று கூறியிருந்தார். இப்போது, அவர் வெற்றி பெற்றிருப்பதில் தென்னிந்தியர்களாக நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். வேட்டி கட்டிய தலைவர் ஒருவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழகத்தோடு நெருங்கிய உறவு கொண்டவர். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்.

அதேபோல், துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவுக்கு, தமிழக ஆளுநர் **வித்யாசாகர் ராவ்**, **திருநாவுக்கரசர்**, ஆந்திர முதல்வர் **சந்திரபாபு நாயுடு**, ஒடிசா முதல்வர் **நவீன் பட்நாயக்**, மேற்கு வங்க முதல்வர் **மம்தா பானர்ஜி**, ஜார்க்கண்ட் முதல்வர் **ரகுபர் தாஸ்**, **ப.சிதம்பரம்**, **பொன்.ராதாகிருஷ்ணன்**, **டிடிவி தினகரன்** உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share