தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட விடுதலை நாளிதழின் ஆசிரியர் கி.வீரமணிக்கு வயது 83. தனது 29வது வயதில் விடுதலை இதழில் ஆசிரியராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் வீரமணி, 54 ஆண்டுகளாக விடுதலையை தடையின்றி தமிழ்ச் சமூகத்துக்கு தந்துகொண்டிருக்கிறார்.
பார்ப்பனரல்லாதோர் இயக்கமாக உருவாகி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதி, சுயமரியாதைக்காகப் போராடிய பெரியார் மிகச் சரியாக 82 ஆண்டுகளுக்குமுன்னர் இதேநாளில்தான் விடுதலை என்னும் அறிவுச்சுடரை அச்சு ஊடகமாக ஏற்றினார்.
இந்த 82 ஆண்டுகளில் விடுதலையின் இடம் தமிழ்ச் சமூகத்தில் எதுவென்று ஒரு ஆய்வு நடத்தினால் அது, எண்ணிலடங்கா தொண்டுகளை தன் எழுத்தின்மூலம் செய்திருக்கிறது. அரசின் ஒரு அங்கமாக மாறி, சுருங்கிப்போகாமல் தொடர்ந்து அரசை விமர்சித்துவந்தது. இதனால் அரசின் ஆதரவு பெரும்பாலும் விடுதலைக்குக் கிடைப்பதில்லை.
விடுதலைபற்றி அதன் ஆசான் பெரியார் என்ன சொல்கிறார்:
‘‘பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் இடையறாது பாடுபட்டுவரும் ‘விடுதலை’ தினசரியை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்?
தேசத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பார்ப்பனர் செய்துவரும் சூழ்ச்சியையும், அக்கிரமங்களையும் அச்சமின்றி வெளியாக்கிவரும் விடுதலையை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்?
இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு காங்கிரஸ்காரர்களின் சூழ்ச்சிகளை வெட்டவெளிச்சமாக்கி வரும் விடுதலையை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்?
தீண்டாமையை ஒழிக்கப் போகிறோம் என்றுகூறி, தீண்டாதார் முன்னேற்றத்தைத் தடுக்கச் செய்யும் அக்கிரமங்களை அஞ்சாது வெளியாக்கும் விடுதலையை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்?
பார்ப்பனரல்லாத முஸ்லிம், ஆதிதிராவிட தோழர்களே! என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் மற்றவர்களைப்போல் அரசியலில் முன்னேற்றமடைய வேண்டுமானால், உங்களுக்காகப் பாடுபடும் விடுதலையை ஒவ்வொருவரும் வாங்கிப் படியுங்கள். அதற்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள். விடுதலை வீழ்ச்சியுறுமானால், நீங்கள் வீழ்ச்சியுறுவீர்கள். ஆகையால், உடனே விடுதலைக்கு சந்தாதாரராகச் சேருங்கள்’’ (‘குடிஅரசு’, 14.11.1937, பக்கம் 9). என்று வேண்டுகோள் விடுத்தார் பெரியார்.
82 ஆண்டுகளுக்குப்பின்னர், நான்கு பக்கங்களாக இருந்த ‘விடுதலை’ எட்டுப் பக்கங்களாக பல வண்ணங்களில் ஆஃப்செட் முறையில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் பதிப்பிக்கப்பட்டு வந்த ‘விடுதலை’ திருச்சியில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.,”
