மெட்ரோ – விமர்சனம்

Published On:

| By Balaji

சென்சாரில் சிக்கி படத்துக்கு சர்டிஃபிகேட் மறுக்கப்பட்ட நிலையில் பல்வேறு போராட்டத்துக்கு பிறகு ‘ஏ’ சான்றிதழோடு வெளியாகியுள்ள படம் ‘மெட்ரோ’. இப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தபோது தன் வீட்டில் ‘என்னடா பிட்டு படம் எடுத்திருக்கியா என்று கேட்டார்கள்’ என வருத்தப்பட்டிருந்தார் இப்படத்தின் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன். ஆனால், படம் வெளியாகி இரு நாட்களில் ஓரளவுக்கு ‘டாக்’ கிடைத்திருக்கிறது என்பதே உண்மை.

ஹீரோ சிரிஷும் அவரது நண்பர் சென்ட்ராயனும் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார்கள். ஹீரோவோட அப்பா, போலீஸ் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். ஹீரோவோட தம்பி சத்யா, என்ஜினீயரிங் படித்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் சத்யா, மற்ற மாணவர்களைப் போல் தானும் விலையுயர்ந்த பைக், போன் வைத்து சுற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதையெல்லாம் வீட்டில் கேட்கும் சத்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சத்யாவுடன் படிக்கும் நண்பன் ஒருநாள் விலையுயர்ந்த போன் ஒன்றை வைத்துக்கொண்டு பேசி வருவதை பார்க்கும் சத்யா, அவனிடம் அதை எப்படி வாங்கினாய் என்று கேட்கிறார்.

உடனே சத்யா பைக்கில் அமரவைத்து போகும்வழியில் ஒரு பெண்ணிடம் செயினை அறுத்து காட்டி, இப்படித்தான் என் ஆடம்பர செலவுகளைச் செய்கிறேன் என்று சொல்கிறான். அதைப்பார்த்து சத்யாவுக்கும் ஆசை ஏற்படுகிறது. சத்யா, நிஷாந்துடன் சேர்ந்து செயின் பறிக்க முடிவு செய்கிறார். இந்தக் கூட்டத்துக்கு தலைவனாக இருக்கும் பாபி சிம்ஹா, பறிக்கும் நகைகளை விற்கும் தொகையில் முக்கால்வாசியை எடுத்துக் கொண்டு, மீதியை அனைவருக்கும் தருவது சத்யாவுக்குப் பிடிக்கவில்லை. எனவே, தான் பறிக்கும் நகைகளை தானே விற்று பணமாக்க முடிவு செய்கிறார். இது பாபி சிம்ஹாவுக்கு தெரியவந்ததும், சத்யாவை அழைத்து கண்டிக்கிறார். இருந்தும் சத்யா, பாபி சிம்ஹாவை எதிர்க்க முடிவு செய்கிறார். இறுதியில், பாபி சிம்ஹா – சத்யா இருவருக்கும் உண்டான மோதல் எங்கு போய் முடிந்தது? சத்யாவின் குடும்பம் இதனால் எந்தளவுக்குப் பாதிப்பை அடைந்தது? என்பதே மீதிக்கதை.

சிரிஷுக்கு முதல் படம்தான் என்றாலும் அருமையாக நடித்துள்ளார். இடைவேளைக்குப் பிறகுதான் இவருக்கு நடிக்க ஸ்கோப் கிடைக்கிறது. அதை ஓரளவுக்கு தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். நாயகி மாயா, இப்படத்தில் கதாநாயகி ஒருவர் வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நாயகி தேவையே இல்லை எனலாம்.

பாபி சிம்ஹா, மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இனிமேல் இயக்குநர்கள் அவருக்கு டயலாக் குறைவாகவே கொடுக்கலாம். பாடி லாங்குவேஜிலும், முகபாவனையிலும் நடித்து விடுபவருக்கு டயலாக் தடையாகத்தான் இருக்கிறது. சென்ட்ராயன் மீண்டும் லைம் லைட்டுக்கு வரவழைக்கும் படமாக இதை சொல்லலாம். சென்ட்டிமென்ட்டும் வரும் என இந்தப் படத்தில் காட்டிவிட்டார்.

செயின் பறிப்பை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன், படம் முழுக்க செயின் பறிப்பு சம்பவங்கள் இருந்தாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதால் படம் பார்ப்பதற்கு சலிப்பு ஏற்படாமல் செல்கிறது. ஒரு செயின் பறிப்பு கும்பலின் பின் உள்ள விவரங்கள் குறித்து செம விளக்கமாகக் காட்டியுள்ளனர்.

மெட்ரோ – பார்க்கலாம், ஆனால் பெரியவர்கள் மட்டும்!

(சின்னப்பசங்களை தெரியாம கூட்டிட்டு வந்தவங்களை ‘ஏ’ சர்டிஃபிகேட் காரணமாகத் திருப்பி அனுப்புறாங்க பாஸ்).

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share