முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

Published On:

| By Balaji

ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலுள்ள 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2,546 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, 4,700 ஊராட்சித் தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (டிசம்பர் 27) காலை 7 மணிக்குத் தொடங்கியது.

ADVERTISEMENT

இதற்காக 27 மாவட்டங்களில் 24,680 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,83,959 வாக்குப் பெட்டிகள் வாக்குப் பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 702 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட 13,764 பேர் பணியில் உள்ளனர். மொத்தம் 2,31,890 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்தத் தேர்தலில் சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பாதுகாப்புப் பணிகளில் 60,000 காவலர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்காளர்களும் நான்கு பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குப் பதிவை வீடியோவாகப் பதிவு செய்வதுடன், வெப் கேமராக்கள் மூலம் வாக்குச் சாவடிகள் கண்காணிக்கப்படுகின்றன. வாக்குப் பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இன்று தனியார் நிறுவனங்கள் விடுமுறைவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

**முதல்வர் வாக்களிக்கிறார்**

ADVERTISEMENT

முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடி பகுதியிலும் இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் சேலம் வரும் முதல்வர், அங்கிருந்து கார் மூலம் எடப்பாடி அருகேயுள்ள தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்குச் சென்று தனது வாக்கைச் செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு வந்து தங்குகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share