இயக்குநர் நெல்சனுடன் ரஜினிகாந்த் இணையும் படத்தில் கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யுடன் ’பீஸ்ட்’ படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது அடுத்த படத்தை நடிகர் ரஜினிகாந்த்துடன் அறிவித்து இருக்கிறார். இது ரஜினிகாந்த்தின் 169வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு நெல்சன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையும் இரண்டாவது படம் இது.
‘பீஸ்ட்’ படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால் இந்த படம் கைவிடப்பட்டது என வதந்திகள் கிளம்ப நடிகர் ரஜினியும், நெல்சனும் இந்த தகவலை மறுத்து படம் நடக்கும் என தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்கள்.
ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் திரைக்கதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நெல்சன் பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி கமர்ஷியலாக கதை இருக்கும் என சொல்லப்படுகிறது. திரைக்கதையின் இறுதி வடிவத்தில் தான் கே.எஸ். ரவிக்குமாரும் இணைந்திருக்கிறார். நெல்சன் திரைக்கதையில் அவரது பங்கும் இருக்கிறது என சொல்லப்படுகிறது.
‘படையப்பா’, ‘முத்து’ என இதற்கு முன்பு ரஜினிக்கு ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். அதனால் இந்த திரைக்கதையில் அவருடைய பங்கு இருக்கிறது என்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.
**ஆதிரா**