டி.எஸ்.எஸ்.மணி
24-01-2020 வெள்ளிக் கிழமை மாலை, சென்னையில் வாழும் படித்த நடுத்தர, மேல்தட்டு இளைஞர்களும், யுவதிகளும் கூடிய இடம் எல்டாம்ஸ் சாலையில் உள்ள, ஐ.ஈ.எல்.சி. வளாகம். சிறிய இடம். கூட்டம் அதிகம். எடுத்துக் கொண்ட விஷயம் அப்படி..அதை விட வருகை புரிய இருக்கும் பேச்சாளர்கள்.
குறிப்பாக கண்ணன் கோபிநாத். நடுவண் அரசின் மின்சார அமைச்சகத்திலிருந்து டையு, டாமன் பகுதியில் பணியாற்றும் போது, காஷ்மீரில் 370 ரத்து் அறிவித்த ஆகஸ்ட் மாதம் இனியும் தாங்க முடியாது என்று ராஜினாமா செய்த கேரளாவைச் சேர்ந்த 32 வயது இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரி. அவரது வருகையையும், பேச்சையும் எதிர்பார்த்து கூட்டம் இருந்தது எனபது உண்மை. ஆனாலும், அது வரை, அரசாங்கத்தை எதிர்த்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த, மாநகர காவல்துறை ஆணையரிடமே அனுமதி கேட்க வேண்டுமா? என்று கூடியிருந்த இளைஞர்கள் கொதித்து எழுந்தனர்.
ஜனவரி 28 ம் தேதி, அனுமதி பெறாமல் போராட்டம் 15 நாட்களுக்கு நடத்தக் கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனால், அறிவிக்கப்படுகிறது. அதாவது, இந்த நகர் காவல் சட்டம் 41 பிரயோகிக்கப்படாவிடில், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக, ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு தொழிற்சங்கமும், மாநகரக் காவல் ஆணையத்தின் அனுமதியைக் கோராமலேயே, ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் நடத்தலாம் என்று பொருள். சரி. இந்த நகர் காவல் 41 வது சட்டப்பிரிவு, எப்போது, எதற்காக, அறிவிக்கப்பட முடியும்? அதாவது, அசாதாரணமான சூழல்களில் மட்டும் ( Only at the time of Exra- ordinary Situations) இந்த சட்டப்பிரிவு பிரயோகிக்கப்படலாம். அதனால்தான் அதற்கான கால அளவு ( Period) 15 நாட்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நமது சென்னை காவல் ஆணையம் இத்தகைய அசாதாரண சூழ்நிலைக்கான சட்டப்பிரிவை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும், பிரயோகித்து உத்தரவு போட்டு வருவது நடக்கிறதே. ஆண்டு முழுக்க. இது நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதே! பல பத்து ஆண்டுகளாக, இந்த அசாதாரணத்திற்கான சட்டப்பிரிவு பயன்படுத்தப்படும் முறை அமுலில் இருக்கிறதே! இது அரசியல் சட்டம் 19 வது பிரிவில் கொடுத்துள்ள அடிப்படை உரிமையை { கூட, பேச, கூட்டம் போட உள்ள உரிமையை } மீறுவதுதானே?

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில், முன்னால் நிற்கும் இளம் பெண்களும், ஆண்களும் அந்த வெள்ளிக் கிழமையும் முன்னால் நின்றனர். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை எதிர்த்து, தொடர்ந்து சென்னையின் பல இடங்களில், ஒரு மாத காலமாக, ஆர்ப்பாட்டங்கள், கலை, இசை நிகழ்ச்சிகள், முழக்கங்கள், பேரணிகள் , கோலம் வரைதல் போராட்டங்கள், மாணவர்களின் கல்விச்சாலை வளாகப் போராட்டங்கள் ஆகிய பலவற்றையும், கட்சி சார்பற்ற முறையில் நடத்திவரும் இளைஞர்கள், அங்கே அதிகமாக இருந்தனர். எழுபது விழுக்காடு முஸ்லீம் அல்லாத இளைஞர்களும், செயற்பாட்டாளர்களும், தென்பட்டனர்.. முஸ்லிம் பெண்களும்,கணிசமான அளவில் இருந்தனர். முஸ்லீம் ஆண்கள் குறைவாகவே இருந்தனர். அதனால் அந்த கூடலை முஸ்லிம்களின் கூடல் என்று முத்திரை குத்த காவல்துறையால் முடியாது என்றே நினைக்கிறேன்.
முதலில், ஒரு இளம் பெண், சி.ஏ.ஏ. எதிர்ப்பில் ” Hum Dheginge” எனப் பிரபலமாகப் பாடப்படும் உருது மொழிப் பாடலின் மொழிபெயர்ப்பை தமிழில் ” பார்ப்போமே, நாம் பார்ப்போமே” என்பதாக பாடினார்.அந்தப் பாடல் எல்லோரையும் ஈர்த்தது. ஒடுக்கப்பட்டோர் மீதான ஆதிக்கம் பற்றியெல்லாம் அந்தப் பாடல் பாடியது. ராதிகா பேசத் தொடங்கினார். சென்னையில் ஒரு குறிப்பான சூழல் இருக்கிறது என்றார். வட இந்தியாவில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை, தடியடி மூலமும், துப்பாக்கி மூலமும் ஒடுக்குகிறார்கள். ஆனால் சென்னையில், போராட விடாமல், அமைதியாக கைது செய்து விடுகிறார்கள். அல்லது எப்.ஐ.ஆர். போட்டு விடுகிறார்கள் அது எப்படி சரி என்று கேட்டார்.
அதையே கோலம் போட்டு கைதான காயத்ரி கேட்கும் போது, ” நாங்கள் சி.ஏ.ஏ. வை எதிர்த்து போராட அனுமதி கேட்டும் தராத காவல்துறை, பிராமணர் சங்கம் அதே இடத்தில், சி.ஏ.ஏ. வை ஆதரித்து போராட அனுமதி கொடுத்தார்கள்? அது எப்படி? என்று கேட்டார். அதோடு நிற்காமல், “பார்ப்பனீயத்தை எதிர்த்து நாம் மீண்டும் போராடத தொடங்க வேண்டும்” என்றார்., பல்வேறு மேட்டுக்குடி குடும்பங்களிலிருந்து, பல்வேறு செல்வாக்கு அனுபவிக்கும் சமூகப் பின்னணிகள் கொண்ட குடும்பங்களிலிருந்து வந்திருந்த இளம் பெண்கள் அப்படிப் பேசுவது, இந்த நாட்டின் எதிர்காலம், இளைஞர்கள் கைகளில் உத்திரவாதத்தோடு இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
அதற்குப் பிறகு, ஒய்வு பெற்ற நீதியரசர் ஹரி பரந்தாமன் பேசினார். அவரும் நகர் காவல் சட்டம் 41 தவறாகப் பயன்படுத்தப் படுவதை எதிர்த்து பேசினார். அதன் பிறகு பிரபல மூத்த வழக்கறிஞர் வைகை { மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியின் மகள் } பேசினார். அவர் அரசாங்கத்தின் போக்கையும், மாநகர் காவல் ஆணையம் நடந்து கொள்ளும், அரசியல் சட்ட விரோதப் போக்கையும் கடுமையாகக் கண்டித்து பேசினார்.
பிறகு எல்லோரும் எதிர்பார்த்திருந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவியை தூக்கி எறிந்த கண்ணன் கோபிநாத் வந்தார். உடனேயே மைக்கை கையில் எடுத்து, சாதாரணமாக, இளைஞர்களுக்கு சி.ஏ.ஏ. என்றால் என்ன, என்.ஆ..ர்.சி. என்றால் என்ன, என்.பி.ஆர். என்றால் என்ன என்பதை பற்றி கேள்விகள் கேட்டு விளக்கி பேசினார்.
அதன் பிறகு நாடெங்கும் எழுந்துள்ள எழுச்சி பற்றி விளக்கினார். மக்கள் எழுச்சிக்கு வெற்றி கிடைக்காதா என வினவினார். கிடைக்கும் என்று அவரே நம்பிக்கை கொடுத்தார். அமித் ஷா, “சி.ஏ.ஏ. வை திரும்பப் பெற மாட்டோம்” என்று கூறும்போதே, சில அடிகள் பின்னால் சென்று கொண்டே கூறுகிறார் என்கிறார். அமித் ஷா கண்டிப்பாக என்.ஆர்.சி. யை நாடெங்கும் அமுல்படுத்துவோம் என்று மக்களவையில் பேசிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி கூட்டத்தில், நாங்கள் என்.ஆர்.சி. பற்றி அமைச்சரவையில் பேசவே இல்லை என்று கூறியதை நினைவு படுத்தினார். நாளை, ’யார் அமித் ஷா, எனக்கு தெரியாதே அவரை’ என்று கூட மோடி கூறிவிடுவார் என்றார். ஆகவே, நம்பிக்கையோடு இருங்கள். மக்கள் எழுச்சி தொடர, தொடர தானாகவே ஆள்வோர் எல்லாவற்றையும் திரும்பப் பெறுவர் என்றார்.

இல்லாவிட்டால், ஆட்சி மாறும்போது, திரும்பப் பெறப் படும் என்றார். அது எப்படி? மும்பையில், ஆரா குடியிருப்பில், மரங்களை வெட்டினார்கள்? மாணவர்கள் மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு போராடினார்கள்? மாணவர்கள் கைது செய்யப் பட்டார்கள். உச்சநீதிமன்றம் தலையிட்டது. மரங்களை வெட்டுவதற்கு தடை போட்டது., மாணவர்களை விடுதலை செய்ததே? அதற்குப் பிறகு மஹாராஷ்டிராவில்,ஆட்சி மாறியவுடன், அனைத்து மாணவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப் பட்டதே அது போல என்றார்.
அதாவது, மக்களது போராட்டம் தொடரும்போதுதான், எதிர்க்கட்சி நாளை ஆட்சிக்கு வந்தாலும் அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் திரும்பி பெறும் என்றார். தான் அலகாபாத்தில் பொதுக் கூட்டம், பேச சென்ற போது, எனக்கு தடை போட்டு, இரண்டு மாவட்டம் முன்பே என்னைத் தடுத்து விட்டார்கள். இப்போது, வாரணாசியில் பொதுக் கூட்டம் பேச செல்கிறேன் என்றார்.
மொத்தத்தில், இளைஞர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும் கூட்டமாக அது இருந்தது. இப்போது, அந்த உருதுப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு பாடல், ‘பார்ப்போமே, நாம் பார்ப்போமே’ வெளிவந்து விட்டது. எல்லோரையும் அப்படியே கட்டிப் போடுகிறது”