மீண்டும் ஊரடங்கா?: ராதாகிருஷ்ணன் பதில்!

Published On:

| By admin

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்குச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரைச் சென்னை ஐஐடியில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. அங்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் ஆங்காங்கே பரவி வருகிறது. சென்னை ஐஐடியில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் தமிழகத்தின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் பாதிப்பைத் தவிர்க்க முடியும். 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்குத் தொற்று உள்ளது. மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும் என்றார்.

தொடர்ந்து நேற்று கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் நடத்திய ஆலோசனை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை செயலாளர், மார்ச் 2020-ஐ ஒப்பிட்டுப் பார்க்கும் போது பல்வேறு பாடங்களை கற்றுள்ளோம். அதனால் பதற்றம் அடையத் தேவையில்லை.பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும்தான் தற்போது வல்லுநர்கள் கருத்தாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறினார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share