ஜனாதிபதியை புறக்கணிக்கும் மோடி: ஒன்றுசேர்ந்த 19 எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

Published On:

| By christopher

”குடியரசுத்தலைவர் இன்றி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பது அரசியலமைப்பை மீறும் கண்ணியமற்ற செயல்” என்று 19 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், குடியரசுத்தலைவர் தான் கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று என கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று (மே 23) எம்.பி.க்களுக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அழைப்பிதழ் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெயர் இடம்பெறாததைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்புவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதை புறக்கணித்துள்ளன.

இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து இன்று கண்டனக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

ADVERTISEMENT

அதில், “புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். எனினும் ஜனாதிபதி முர்முவை முற்றிலுமாக புறக்கணித்து, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, நாட்டுக்கு அவமானம் மட்டுமல்ல. நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

“இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 79, ‘குடியரசுத் தலைவர் இந்திய நாட்டின் முதன் குடிமகன் என்பதோடு நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியும் கூட’ என்று கூறுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் குடியரசுத்தலைவர் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றமே இயங்க முடியாது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் இன்றி பிரதமர் திறந்து வைப்பது அரசியலமைப்பை மீறும் கண்ணியமற்ற செயல்.

நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத்தலைவராக திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே மோடி அரசு சீர்குலைத்துவிட்டது

பிரதமரின் ஜனநாயக விரோத செயல்கள் ஒன்றும் புதியவை அல்ல. இந்திய மக்களின் பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டு, முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வை நடக்கவிடாமல் பாஜக உறுப்பினர்கள் சீர்குலைத்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்கள் உட்பட பல சர்ச்சைக்குரிய சட்டங்கள் எந்த விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் நாடாளுமன்றக் குழுக்கள் நடைமுறையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவலால் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த நிலையில், பெரும் பொருட் செலவில், எம்.பி.க்களின் கருத்தை அறிய எவ்வித ஆலோசனைகளையும் நடத்தாமல் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் மதிப்பு பறிக்கப்படும் போது, அந்த புதிய கட்டிடத்திற்கு மதிப்பில்லை. இதனால் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக 19 கட்சிகள் கூட்டு முடிவாக அறிவிக்கிறோம்

இந்த சர்வாதிகார பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.மேலும் நமது செய்தியை நேரடியாக இந்திய மக்களுக்கு எடுத்துச் செல்வோம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

’பிரதமர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார்’: அமித்ஷா உறுதி!

’எடப்பாடி ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது’: தங்கம் தென்னரசு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share