நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன்படி ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த மாதத்தில் 19 கிலோ வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,903 க்கு விற்கப்பட்டது. தற்போது, வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நவம்பர் 1ஆம் தேதியான இன்று19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி கடந்த 4 மாதத்தில் 155 ரூபாய் வரை வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை ஏறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,802 -க்கும், மும்பையில் 1,754.50-க்கும், சென்னையில் 1,964.50-க்கும், கொல்கத்தாவில் 1,911.50-க்கும் விற்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால், மற்ற மாநகரங்களை விட சென்னையில்தான் விலை அதிகமாகும்.
அதே வேளையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தொடர்ந்து, 818.50க்கு விற்பனையாகிறது. அந்த வகையில், இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
Comments are closed.