ADVERTISEMENT

பட்ஜெட்: மருத்துவத் துறைக்கு 18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

Published On:

| By Monisha

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்குத் தமிழ்நாடு பட்ஜெட்டில் 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 20) நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

ADVERTISEMENT

இதில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தனது உரையில், “தரமான கல்வியும் மருத்துவ வசதிகளும் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடச் செய்வதே இந்த அரசின் அடிப்படை நோக்கம்.

இதனைக் கருத்தில் கொண்டு மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற பல முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு,

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசின் முன்னோடி திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்றா நோய்கள் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

தொழிற்சாலைகளிலும் கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சியாகத் தொடங்கவுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக 718 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

உயர் ரத்த அழுத்த, நீரிழிவு போன்ற நோய்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைவார்கள்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 11.82 லட்சம் நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்நோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறந்து வைக்கப்படும்.

1020 கோடி ரூபாய் செலவில் மதுரை, கோயம்புத்தூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் 3 அரசு கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும் புதிய உயர் மருத்துவ கட்டிடங்களும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

திருச்சிராப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உயர் மருத்துவ சிகிச்சை தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில் 110 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

வடசென்னை பகுதி மக்களின் மருத்துவ தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய பன்நோக்கு மருத்துவ பிரிவும் செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டிடங்கள் 147 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் 40 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

வரவு செலவு திட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மோனிஷா

100 நாள் வேலை: 22 ஆயிரத்து 562 கோடி ரூபாய்

புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு!

18 thousand crore allocation for medical sector
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share