டெல்லியில் ஜி-20: 160 விமானங்கள் ரத்து!

Published On:

| By Selvam

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டை முன்னிட்டு 160 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்கான ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பைச் சுழற்சி முறையில் இந்தியா ஏற்றுச் செயலாற்றி வருகிறது.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான உச்சி மாநாடு செப்டம்பரில் தொடங்கி நடைபெறவிருக்கிறது. இது தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கிறது.

ஏறக்குறைய 30 நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர்.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் போன்ற தலைவர்களுக்காக 50-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் டெல்லி விமான நிலையத்துக்கு வரவிருக்கின்றன.

160 Flights cancelled in Delhi

இதனால் ஏற்படும் விமானப் போக்குவரத்து பிரச்சினைகளைத் தவிர்க்க, இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி டெல்லி விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை நான்கில் ஒரு பங்காகக் குறைக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக விமானங்களின் பயண நேரங்கள் மாற்றியமைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

டெல்லி விமான நிலையத்தில் சுமார் 220 பார்க்கிங் ஸ்டாண்டுகள் இருக்கின்றன.

ஆனால், விமானப் போக்குவரத்தில் ஏற்படும் திடீர் அதிகரிப்பு காரணமாக, அனைத்து ஸ்டாண்டுகளும் பயன்படுத்தினாலும் நெருக்கடி ஏற்படும் என்கிறார்கள்.

எரிபொருள் மற்றும் சீரமைப்பு வசதிகள் போதியளவு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், இந்த விமான நிலையத்தில் நெரிசலைத் தவிர்க்க, பிரதிநிதிகளை இறக்கிவிட்ட பின்னர் சிறப்பு விமானங்கள், லக்னோ, ஜெய்ப்பூர் போன்ற அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

 

ஆனால், அவசர நிலை ஏதாவது ஏற்படும்பட்சத்தில் தலைவர்கள் குறுகிய அறிவிப்பில் திரும்பிச் செல்ல நேரிடும். எனவே, பங்கேற்கும் நாடுகளின் உளவு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் இந்த யோசனையை ஏற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

160 Flights cancelled in Delhi

இந்த நிலையில் ஜி-20 மாநாட்டுக்காக மூன்று நாட்கள் மட்டும் 160 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக டெல்லி விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெல்லி விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 80 (வருகை), 80 (புறப்பாடு) விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. உள்நாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு சர்வதேச விமான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், “டெல்லி தலைநகராக இருப்பதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் வழக்கமான செயல்பாடுகளை இது பாதிக்கும்.

விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு இழப்பீடாக கணிசமான தொகையை வழங்க நேரிடும்” என்று இதுகுறித்து பேசியுள்ள விமான நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார்.

ராஜ்

ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share