அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தற்காலிக அவை தலைவர் கே.பி.முனுசாமி தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று (டிசம்பர் 10) நடைபெற்றது.
இதில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. பொது எதிரியை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக பாஜகவுடன் வெற்றி கூட்டணி அமைத்ததற்கு 2.5.2025 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்த பொதுக்குழுவில் முழுமனதாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
2. வருகிற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏகமனதாக இப்பொதுக்குழு வழங்குகிறது.
3.. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றபோது, இயற்கை பேரிடரை பாதுகாப்பாக எதிர் கொள்ளவும் மக்களை பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது திமுக அரசு.
4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது. கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக சரியாக போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத திமுக அரசின் நிர்வாக திறமையற்ற போக்கிற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் ‘பஸ் போர்ட்; அமைக்கவும் வலியுறுத்தப்படுகிறது.
5. வாக்குப்பதிவு முறையாகவும் சரியாகவும் திகழ வேண்டும் என்பதாலேயே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை அதிமுக வரவேற்கிறது. முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லுமுல்லுகளை நீக்கி தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர்கள் பட்டியல் வெளியிட வேண்டும்.
6. விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து விவசாயிகளை பாதுகாக்கவும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்துவதற்கு மத்திய அரசின் ஆணையைப் பெற்று, நெல் கொள்முதல் முறையை முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று திமுக அரசை கேட்டுக்கொள்கிறது.
7. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள்! இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக் கனியாகும் வேலைவாய்ப்புகள்! தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் முதல்வருக்கு கண்டனம்.
8. தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாக திறனற்ற போக்கிற்கு கண்டனம்.
9. தமிழக மக்களை தொடர்ந்து கடனாளிகளாக்கும் நிர்வாக திறனற்ற திமுக பெயிலியர் மாடல் அரசுக்கு கண்டனம்.
10. சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது.. தொடரும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்கள் பழக்கம் கூலிப்படையை ஏவி விட்டு கொலை, கடத்தல், வழிப்பறி… காவல்துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும் முதலமைச்சருக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
11. 2021ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, மிக குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அரைகுறையாக நிறைவேற்றிவிட்டு, நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்கள் ஆக்குதல், டீசல் பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூபாய் 100 வழங்குதல் போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு எதையும் நிறைவேற்றாமல் எல்லோருக்கும் எல்லாம் என்று ஆசை காட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகிற திமுக மாடல் அரசுக்கும் முதலமைச்சருக்கும் கண்டனம்.
12. முதலமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்று தொடங்கி மதுரை மேயர் ராஜினாமா என்கிற அளவுக்கு ஊழல் சாம்ராஜ்யமாக திகழும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
13. பட்டியலின மக்களை இழிவு செய்வதும் ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதற்கு கண்டனம்.
14. கோதாவரி – காவிரி இணைப்பு, தென்னக நதிகளின் இணைப்பு, ஆனைமலையாறு – பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை தொடர்வதற்கு அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மிக நீளமான பாலத்தை 1,621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா நடத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.
15. நீதித்துறைக்கு சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இந்த பொதுக்குழு கண்டிக்கிறது
16. எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியை 2026 இல் மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என்று சூளுரை ஏற்போம்.
ஆகிய தீர்மானங்கள் இன்றைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
