பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிட்டு வந்த 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. 16 Pakistani YouTube channels ban Pahalgam attack
கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி-வாகா எல்லை மூடல் என மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆத்திரமூட்டும் மற்றும் தவறான கருத்துகளை பரப்பியதற்காக டான், சமா டிவி உள்ளிட்ட 16 முக்கிய பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ் மற்றும் சுனோ நியூஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும்,
பத்திரிகையாளர்கள் இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் ஃபரூக் ஆகியோரின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும் தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், சமா ஸ்போர்ட்ஸ், உசைர் கிரிக்கெட் மற்றும் ராசி நாமா ஆகிய சேனல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட சேனல்களுக்கு மொத்தம் 63 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நேற்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் 140 கோடி இந்தியர்களுடன் உலகம் முழுவதும் துணை நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும். நீதி நிலைநாட்டப்படும். குற்றவாளிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முடுக்கியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத சதியை வெளிக்கொணர, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட நேரில் கண்ட சாட்சிகளை விசாரிப்பதிலும், ஆதாரங்களைத் தேடுவதிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
