மின்சாரத் துறையில் உடனடியாக 15,000 இடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் பேட்டி!

Published On:

| By Kavi

மின்சாரத் துறையில் 15 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டு அடிகடி ஏற்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (ஜூன் 8) சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர் கூறுகையில்,  ”உதவிப் பொறியாளர்களாக  இருந்து 15 வருடங்களுக்கும் மேலாகக் காத்திருந்த 300 பேருக்குச் செயற்பொறியாளர்களாக உடனடியாகப் பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது முதல்வர் விஜய் உத்தரவின்படி, ஊழியர்களின் நீண்டகாலப் பாக்கிகள் மற்றும் பணி உயர்வுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன. 

ADVERTISEMENT

மின்சார வாரியத்தில் தற்போது 70,000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அதில் முதற்கட்டமாக இந்த ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 15,000 பேரையாவது அரசுப் பணிகளாக நிரப்பப்படும். 

வேலைக்கு எடுப்பதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றார். 

ADVERTISEMENT

சென்னையில் ஏற்படும் மின்வெட்டு தொடர்பாக பேசிய அவர், ”சென்னையில் அதிக வெப்பம் காரணமாக ஒரு சில இடங்களில் டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்பட்டது. அது போன்ற இடங்களில் உடனடியாக 40 நிமிடங்களுக்குள் சரி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உள்ளன. இதில் 60 முதல் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை 20 ஆண்டுகள் பழமையானவை என்பதால் ஆங்காங்கே பிரச்சனைகள் வருகின்றன. அவை தொடர்ந்து சரி செய்யப்பட்டு வருகின்றன. 

சென்னையில் ஒரே பகுதியில் மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்பட்டதால், சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு சில நபர்கள் வேண்டுமென்றே ஃபியூஸ்களைப் பிடுங்கித் திருடிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், அந்த வீடியோ ஆதாரங்களும் விரைவில் வெளியிடப்படும். 

தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு என்பது கிடையாது. நம்மிடம் தேவையான மின்சாரம் உள்ளது, மாறாக உபரி மின்சாரத்தை  மத்தியத் தொகுப்பிற்கு விற்பனை செய்து வருகிறோம். ஆங்காங்கே ஏற்படும் மின் தடைக்குத் தளவாடப் பொருட்களின் பழுதுகளே  காரணம்,

கடந்த ஆட்சிக் காலத்தில் டெண்டர் மதிப்பீடுகளில்  பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. உதாரணமாக, ரூ.1,500 கோடி மதிப்புள்ள டெண்டரில் ரூ.397 கோடி முறைகேடு நடந்து அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரூ.8 லட்சம் மதிப்புள்ள மின்மாற்றியை ரூ.13 லட்சத்திற்கு டெண்டர் விட்டுள்ளனர். 

இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பாலிசி லெவலில் மாற்றம் செய்யப்பட்டு சந்தை மதிப்பு மற்றும் உற்பத்தியாளர் விலையை ஆராய 3 தனித்தனி கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன . அடுத்த வாரத்தில் இருந்து வெளியாகும் அனைத்து டெண்டர்களும் இந்த கமிட்டியின் ஒப்புதல் பெற்றே வெளியாகும். இதன் மூலம் அரசுக்கு நேரடியாக 35% வரை லாபம்  ஏற்படும்” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share