சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், நடிகர் சசிகுமார் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை இன்று (ஜூலை 4) வெளியிட்டுள்ளார்.
80-களின் காலக்கட்டத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்தியப் படம் ‘சுப்ரமணியபுரம்’. இயக்குநர் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சசிகுமார் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவிற்கு நுழைந்தது இந்த படத்தின் மூலம் தான்.
சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரகனி, ஸ்வாதி ஆகியோர் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 4 வெளியான இந்த படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையில் நடிகர் சசிகுமார் ரசிகர்கள் மற்றும் படத்தில் நடித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சுப்ரமணியபுரம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 15 வருடம் போனதே தெரியவில்லை.
இந்த படம் இப்போது தான் ஆரம்பித்தது போல் உள்ளது; ஆனால் 15 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. ரொம்ப சந்தோசமாக உள்ளது.
இத்தனை வருடங்களுக்கு பிறகும் மக்கள் மனதில் இந்த படம் இருக்கிறது என்றால் அது மக்களின் ஆதரவு தான்.
இந்த நேரத்தில் மக்களுக்கு நன்றி சொல்கிறேன். சுப்ரமணியபுரம் வந்த போது அதை மக்கள் தோள்களில் வைத்து கொண்டாடவில்லை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். நான் இந்த இடத்தில் இன்று இருப்பதற்கு காரணம் அந்த படம் தான்.
இந்த நேரத்தில் சினிமா ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், எனது நண்பர்கள் மற்றும் படத்தில் என்னுடன் பணியாற்றிய சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, ஜெய், ஸ்வாதி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த 15 வருடங்களில் நல்லது, கெட்டது என நிறையவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். கற்றுக்கொண்டேன் என்பதை விட அனுபவித்து கடந்து வந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்”என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செந்தில்பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகளின் தீர்ப்பு என்ன?
குற்றவியல் சட்டம் அமலாக்கத் துறைக்கும் பொருந்தும்: நீதிபதி நிஷா பானு
