ஒரு இயக்குனர் ஒரே மாதிரியான வகைமையில் படம் இயக்க வேண்டுமா அல்லது வெவ்வேறு வகைமையான படங்களை ரசிகர்களுக்குத் தர வேண்டுமா? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாகப் பதிலளிக்கக் கூடும். ஒரே திசையில் தொடர்ச்சியாக இயங்கும்போது, அந்த உழைப்பில் நுட்பம் பெருகும் என்று சிலர் கருதலாம். பல்வேறு கதாபாத்திரங்கள், களங்களைக் காட்டுவதன் வழியே பல்வேறுபட்ட உணர்வுகளை உயிர்ப்பிப்பது மாபெரும் திறமைதானே என்று சிலர் சொல்லலாம்.
அப்படிப் பார்த்தால், இரண்டாவது வகையில் தேர்ச்சி பெறும் இயக்குனர்கள் மிகக்குறைவு என்றே சொல்லலாம். போலவே, ஒரு மைல்கல் சாதனையாகக் கருதும் வகையில் ஒவ்வொரு படத்தையும் தருவது இன்னும் கடினம். அந்த வகையில், இயக்குனர் சசி அப்படியொரு படைப்பாளி என்று கருதுகிறேன். யார் இவர் என்பவர்களுக்கு, ‘பூ’ பட இயக்குனர் என்று சொன்னால் எளிதாகப் புரியும்.
இயக்குனர் சசி தான் தந்த ‘பூ’ திரைப்படம் போன்று இன்னொரு படைப்பை இன்றுவரை தரவில்லை. அப்படித் தந்துவிடக் கூடாது என்பதில் அவர் தீர்மானமாக இருக்கிறாரோ என்று கூட யோசித்திருக்கிறேன். தான் தொடாத வகைமைகளுக்குள் புகுந்து கொள்வதுதான், இன்றளவும் இயக்குனர் சசி இயங்கி வருவதற்கான காரணமாக உள்ளது என்றும் நம்புகிறேன்.
அந்த அளவுக்கு, ‘பூ’ படம் பல்வேறு வகையில் நம்மை ஆச்சர்யப்பட வைப்பதாக அமைந்திருக்கும். இன்றோடு அப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன.
எளிமையான கதை
சிறு வயது முதலே மாமா மகனைத் திருமணம் செய்வதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், அது நிறைவேறாமல் போகும்போது என்னவாகிறாள் என்பதே ‘பூ’ படத்தின் கதை. அந்த நிலைக்கு ஆளாகும் ஒரு பெண், வேறொரு ஆணுடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்துகிறார். கோயில் கொடைவிழாவுக்கு மாமா மகன் குடும்பத்தோடு வருவது அறிந்து அவனைச் சந்திக்கச் செல்கிறார். அங்கு, அவர் எதிர்கொண்ட அனுபவம் எத்தகையது என்பதோடு படம் முடிவடைகிறது.
‘இவ்ளோ சிம்பிளான கதையா’ என்றே முதல் முறை கேட்கும் எந்தவொரு ரசிகரும் கேட்கக் கூடும். ஆனால், நம் எண்ணம் பொய்யாகும் அளவுக்கு, இதில் பல விஷயங்கள் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கும். சிறு துளி பெருவெள்ளம் போல, படத்தின் முடிவில் அது நம் மனதை முழுதாக அடைத்துக் கொள்ளும்.

இத்திரைப்படமானது தமிழ்ச்செல்வன் எழுதிய ‘வெயிலோடு போய்’ சிறுகதையின் தழுவல் என்பது பலரையும் ஆச்சர்யப்படவைத்த ஒரு விஷயம். படம் வெளியானபோது மட்டுமல்ல, இப்போதும் அந்த ஆச்சர்யம் பெருகுகிறதே தவிர குறைவதில்லை.
சில பக்கங்களில் முடிந்துவிடக் கூடிய ஒரு சிறுகதையை எப்படி இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவாக மாற்ற முடியும்? இந்த சந்தேகத்தைத் தீர்ப்பதற்கான பெரும் உதாரணமாக ‘பூ’ படத்தைக் காண்கிறேன்.
கதையில் வரும் பாத்திரங்கள் குறைவென்றபோதும், ஒவ்வொன்றுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கும். ஏதோ ஒன்றை நியாயமெனக் கருதும். சக மனிதர்களைப் பற்றிய அபிப்ராயங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றைச் சுவாரஸ்யமாகத் திரையில் சொன்னாலே சில காட்சிகள் தேறிவிடும். மையக்கதையில் வரும் சம்பவங்களை ஒட்டியோ, முன்பின்னாகவோ சில காட்சிகளைத் தேற்றிவிட முடியும்.
அதே சிறுகதையைப் பெரிய திரைக்கு ஏற்றாற்போல மாற்றும்போது தன் சுயத்தை வெளிப்படுத்தச் சில இடங்களை உருவாக்குவார் இயக்குனர். அனைத்தையும் கதை நிகழும் களம், கதாபாத்திரங்கள் மற்றும் அங்கிருக்கும் கலாசாரம் சார்ந்து ஒரு சரமாகக் கோர்த்தாலே, நேர்த்தியான திரைக்கதை வாய்த்துவிடும் என்று உணர்த்தியது இப்படம்.
திரைக்கதை, வசனம், கதாபாத்திர வடிவமைப்பு, காட்சியாக்கம் என்று பல அம்சங்களில் தாங்கவே முடியாத அளவுக்கு எளிமையைக் கொண்டது ‘பூ’. இதில் பல காட்சிகள் கவித்துவமானவை. அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு காட்சியும் ஒரு சிறுகதையின் உள்ளடக்கம் போன்றே தோற்றமளிக்கும்.
ஈர்க்கும் சுவாரஸ்யங்கள் 15 years of poo movie
வழக்கமாக, திரைக்கதையில் யதார்த்தத்தை நிறைத்திருக்கும் படங்கள் வெகுசன ரசனையில் இருந்து நிறையவே விலகியிருக்கும்; பெரிதாக சுவாரஸ்யம் தராது. இதுவே அப்படங்கள் குறித்த பொது அபிப்ராயமாக இருந்து வருகிறது. ‘பூ’ அதனை மிகச்சாதாரணமாகக் கடந்திருக்கும்.
தொடக்கக் காட்சிகளில் சிறுவர், சிறுமியர்க்கு இடையிலான விளையாட்டுகளும் பள்ளிப்பருவத்து அனுபவங்களும் இடம்பெற்றிருக்கும். கூடவே, கிராமப்புறங்களில் அத்தை, மாமா பிள்ளைகளுக்கு இடையே நிலவும் ஈர்ப்பும் விளக்கப்பட்டிருக்கும்.
தொண்ணூறுகளில் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி வட்டாரத்தில் தீப்பெட்டி ஆலைகள், பாய் நெய்யும் ஆலைகளுக்கு வேலைக்குச் செல்வது என்று பல்வேறு வேலைவாய்ப்புகள் இருந்தன. அவற்றில் பெண்களின் பங்களிப்பு கணிசம். அதனால், அந்த அனுபவங்களைத் திரையில் பார்க்கையில் வேறொரு உலகம் நமக்குத் தெரியும்.

பூ படத்தில் மாரி, சீனியம்மாள் இடையிலான உரையாடல்கள் அப்பின்னணியிலேயே அமைக்கப்பட்டிருக்கும். வெறுமனே வேலை சார்ந்த நட்பாக மட்டுமல்லாமல், திருமணத்திற்குப் பிறகும் கூட அந்த வாஞ்சையுடனே அவர்கள் பழகுவதாகக் காட்டியிருப்பார் இயக்குனர் சசி. அக்காட்சிகள் அனைத்துமே மாரி என்ற பெண்ணின் அப்பழுக்கற்ற மனதைச் சொல்வதாக இருக்கும்.
மாரி காதலிக்கும் தங்கராஜ், பதின்ம பருவத்திற்குப் பிறகு நகரத்திற்குச் சென்று கல்லூரி பயில்வார். அங்கு பெறும் அனுபவங்கள், அவரை வேறுமாதிரியாக மாற்றியிருக்கும். அதேபோல, தங்கராஜின் தந்தைக்கும் தன் மகனை வசதியான வீட்டில் மருமகனாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இவை எப்படி மாரி குடும்பத்தைப் பாதித்தன என்பதையும் ’உணர்ச்சிப்பெருக்கோடு’ திரையில் சொல்லியிருப்பார் இயக்குனர்.
மாரியின் சகோதரர், தாய் இருவரும் தங்கராஜ் குடும்பத்தைப் பார்க்கும் விதம் வேறுமாதிரியாக இருக்கும். தங்களது பெண்ணைத் திருமணம் செய்யத் தயாரில்லை என்று அறிந்ததும், அவர்கள் மண்ணை வாரித் தூற்றுவார்கள், அருவெருப்பு கொள்வார்கள். மாரியோ, அதற்காகத் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சுவார். ’மாமா மகன் சுகமாக வாழ வேண்டும்’ என்று இறைஞ்சுவார்.
காதலித்தவன் கிடைக்கவில்லை என்பதால் அவர் தற்கொலை முடிவுக்குச் சென்றதாக ஊரார் நினைக்கையில், ‘மாமா மகன் கல்யாணத்துக்கு நான் போகணும்னு சொல்லி தூக்கு மாட்டியிருக்கா’ என்று அவரது சகோதரர் ஆத்திரப்படுவார். சாதாரண பெண்ணான மாரியைத் தெய்வாம்சம் கொண்டவளாக மாற்றுபவை இக்குணாதிசயங்கள்தான்.
அவற்றை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டுமென்று துடித்த இயக்குனரின் எண்ணத்தை நாம் நிச்சயம் போற்றத்தான் வேண்டும்.
வழியும் வாழ்வனுபவங்கள் 15 years of poo movie
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ காதல் கொண்டார் என்று சொல்வது பொதுவானது. அந்த காதல் உணர்ச்சி எப்படிப்பட்டது என்று ஆராய்ந்தால், அதன் பின்னிருக்கும் வாழ்க்கை அனுபவங்களைக் கணக்கில் கொண்டால், அவையெல்லாம் பல திரைப்படங்களை உருவாக்கும் அளவுக்குச் செறிவு கொண்டதாக இருக்கும். அது நிகழ, ஏற்கனவே வெளியான திரைப்படங்களைப் பார்த்து அவர்கள் காதலிக்காமல் இருந்திருக்க வேண்டும். அந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்த பலர், இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

காதல் தொடங்கிப் பல்வேறு உணர்வுகள் சார்ந்து அவர்களது வாழ்க்கை நெய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் வாழ்வில் வெற்றியடைந்தவர்களாகவும் இருப்பார்கள், தோல்வியை எதிர்கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
அதையெல்லாம் மீறி, அவர்களை நெருங்கிச் சென்று பார்த்தால் அந்த எளிய மனிதர்களுக்குள் பல காவியப் பாத்திரங்கள் காணக் கிடைக்கும். அவற்றை அள்ளி வாரியிறைக்க வேண்டுமென்ற வேட்கையைப் படைப்பாளிகளுக்குத் தரும் ஒரு படைப்பாக விளங்குகிறது ‘பூ’. அதனை என்றென்றைக்கும் தருவதாக இருப்பதே அதன் சாதனை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
கலெக்டர்களுக்கு ED சம்மன்: தடை விதித்த உயர் நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!
15 years of poo movie
