கோவையில் திறக்கப்பட இருந்த பெரியார் உணவகம் என்ற ஓட்டலையும், அதில் வேலை செய்த ஊழியர்களையும் சரமாரியாக தாக்கிய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 15 பேர் இன்று (செப்டம்பர் 14) கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர் காரமடை அருகே கன்னார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அப்பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஓட்டலை திறக்க இன்று காலை ஏற்பாடு செய்து வந்தார்.
நேற்று காலை ஓட்டலை சீரமைக்கும் வேளையில் ஒரு பெண் உட்பட 3 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த சிலர், ஓட்டலை அடித்து நொறுக்கியதுடன் ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர்.
”எதற்கு எங்களை தாக்குகிறீர்கள்?” என்று ஊழியர்கள் கேட்டதற்கு, “நாங்கள் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள். இது எங்களோட கோட்டை.
இங்க நீங்க பெரியார் பேர்ல உணவகம்னு போர்டு வச்சி திறப்பீங்க. அத நாங்க பாத்துட்டு இருக்கனுமா?” என ஆவேசமாக பதிலளித்துள்ளனர்.
மேலும் ”நாங்க போர்டுல பேர் வைக்கிறதுக்கு உங்ககிட்ட எதுக்கு கேக்கனும்?” என்று அங்கிருந்த பெண் ஊழியர் கேட்டதற்கு, ”அதெல்லாம் உனக்கு தேவையில்ல” என்று சொல்லி, அங்கிருந்த பாத்திர சாமான்கள், கண்ணாடிகள் போன்றவற்றை வீசி எறிந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 3 ஊழியர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் அருண் என்ற ஊழியருக்கு மட்டும் 36 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஓட்டல் உரிமையாளர் பிரபாகரன் புகார் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
பின்னர் ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியன் போன்றவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்ததுடன், போலீசார் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.

ஓட்டலை அடித்து நொறுக்கியது தொடர்பாக உரிமையாளர் பிரபாகரனிடம் பேசியபோது, “எனக்கும், அவர்களுக்கும் இடையே எந்த நேரடி தொடர்பும் இல்லை.
பெரியார் படத்தையும், பேரையும் பேனரில் வைத்ததற்காக தான் தாக்கி உள்ளனர். அதிலும் தங்களை இந்து முன்னணி அமைப்பினர் என்று கூறிதான் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
குற்ற செயலில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த தாக்குதலை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் உடுமலை பேட்டையில் பெரியார் பிறந்தநாளை கொண்டாடிய போதும், இந்து முன்னணி அமைப்பினர் ரகளையில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
