இலங்கை கடற்படையால் நேற்று 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 10) ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளையும் அதில் இருந்த 15 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் அவரது படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ஒரு நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு முதல் நடைபெற்று வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரம் இட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், போராட்டத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அரசுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தடைக்காலம் முடிவடைந்து மீண்டும் மீன்பிடி தொடங்கிய மூன்றாவது வாரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள மூன்றாவது கைது நடவடிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
