அதிமுக அலுவலக பகுதியில் 144 தடை!

Published On:

| By Minnambalam

அதிமுக அலுவலக பகுதியில் கலவரம் ஏற்பட்ட நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் பொதுக்குழு நடந்துகொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் பொதுக்குழுவுக்குச் செல்லாமல் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று கைப்பற்றினார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது அலுவலகத்திலிருந்த சில ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தூக்கி எரிந்தனர். இதுமட்டுமின்றி சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதனிடையே ஜெயலலிதா பாணியில் அலுவலக பால்கனியில் நின்று தொண்டர்களை நோக்கி கையசைத்துவிட்டு உள்ளே சென்ற பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதுவொருபுறமிருக்க வெளியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பன்னீர் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்தி குத்து ஏற்பட்டது.

ADVERTISEMENT

அலுவலக கேட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களை உள்ளே விட வேண்டும் என்று போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. லேசான தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். ஈபிஎஸ் ஆதரவாளர்கள் சிலரைக் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அவர்கள், ஓபிஎஸ் ஒழிக’ என்று கோஷம் எழுப்பினர். இதுபோன்ற பரபரப்புக்கு மத்தியில் அதிரடிப்படையினர் தலைமை அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இவ்வாறு கலவரமான சூழல் காணப்படும் அதிமுக தலைமை அலுவலகம் அருகே ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share