திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் : 13 பேர் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

thiruparankundram issue

திருப்பரங்குன்றத்தில் நேற்று (டிசம்பர் 4) மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற முயற்சித்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இந்து அமைப்பினர் 13 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கார்த்திகை தீபத் திருநாளில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி நேற்று தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் 15 மீட்டர் தொலைவில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார். ஆனால் உத்தரவுப்படி தர்கா அருகே ஏற்றாமல் நூற்றாண்டு கால மரபை பின்பற்றி உச்சி பிள்ளையார் கோயில் அருகே வழக்கம் போல் கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்களை அழைத்துச் சென்று மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் சிஐஎஸ்எப் வீரர்கள் மலை ஏற போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் திரும்பி சென்றனர். இதனிடையே மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் ஆத்திரம் அடைந்த பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு காரணமாக வேறு வழியின்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் மலைக்கு செல்லும் வழியில் சூடம் ஏற்று வணங்கி விட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த 15 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் 13 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share