நாடு முழுவதும் கடந்த ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி உட்பட மொத்தம் 13 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 13) எண்ணப்பட்டன.
இதன் முடிவில் 13 தொகுதிகளில் பாஜக இரண்டு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற மற்ற 10 இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றிருக்கின்றனர்.
பிகார் – சுயேச்சை வெற்றி
என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஆளும் பிகார் மாநிலத்தில் ருபாலி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா பாரதி ஆர்.ஜே.டி. கட்சிக்கு மாறியதால் இங்கு தேர்தல் நடைபெற்றது. ஐந்துமுறை எம்.எல்.ஏ.வாகவும், இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தவர் பீமா பாரதி.
இடைத்தேர்தலில் பீமா பாரதி ஆர்.ஜே.டி.சார்பில் போட்டியிட்டார். சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார் முன்னாள் எம்.எல்.ஏ சங்கர் சிங். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கலாதர் பிரசாத் மண்டல் போட்டியிட்டார்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரை காட்டிலும் 8246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 68,070 ஆகும். ஆர்.ஜே.டி வேட்பாளர் 30,619 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இமாச்சல் – காங்கிரஸ் – 2, பாஜக -1
இமாச்சலப் பிரதேசத்தின் டெஹ்ரா, ஹமிர்பூர், நலகார் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் டெஹ்ரா தொகுதியில் 32,737 வாக்குகள் பெற்று 9399 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் தாகூர், பாஜக வேட்பாளர் ஹோஷியர் சிங்கை தோற்கடித்தார்.
ஹமிர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆஷிஷ் ஷர்மா 27,041 வாக்குகள் பெற்று வெறும் 1,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பிந்தர் வர்மா 25,470 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
நலகார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா 34,608 வாக்குகள் பெற்று 8990 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தாகூர் 25,618 வாக்குகள் பெற்றுள்ளார்.
மேற்கு வங்கம் – திரிணமூல் காங்கிரஸ் – 4
மேற்கு வங்க மாநிலத்தில் ராய்கஞ்ச், ரணகத் தக்ஷின், பாக்தா, மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ராய்கஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண கல்யாணி 86,479 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் மணஷ் குமார் கோஷை 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ரணகத் தக்ஷின் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் முகுத் மணி 1,13,533 வாக்குகள் பெற்று 39,048 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமாரை தோற்கடித்தார்.
பாக்தா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் மதுபர்ணா தாகூர் 1,07,706 வாக்குகள் பெற்று 33,455 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பினய் குமாரை தோற்கடித்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 1,297 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
மணிக்தலா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுப்தி பாண்டே 83,110 வாக்குகள் பெற்று 62,312 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கல்யாண் சவுபேவை தோற்கடித்தார்.
உத்தரகாண்ட் – காங்கிரஸ் – 2
உத்தரகாண்ட் மாநிலத்தில் மங்களூர், பத்ரிநாத் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் இரண்டிலுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.
பத்ரிநாத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லக்பத் சிங் புடோலா, 28,161 வாக்குகள் பெற்று 5224 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ராஜேந்திர பண்டாரி 22,937 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
மங்களூர் தொகுதியில் காங்கிரஸின் காசி முகமது நிஜாமுதீன் வெறும் 422 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.
மத்தியப் பிரதேசம் – பாஜக வெற்றி!
அமர்வரா சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தீரன் ஷா, பாஜக சார்பில் கமலேஷ் பிரதாப் ஷா ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், கமலேஷ் பிரதாப் 83,105 வாக்குகள் பெற்று 3027 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷாவை தோற்கடித்தார்.
பஞ்சாப்
பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத் வெற்றி பெற்று, பாஜக வேட்பாளர் ஷீத்தல் அங்கூரல் 37,325 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தமிழ்நாடு
விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 56,296 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை தோற்கடித்தார்.
குறிப்பாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…