தமிழக சட்டமன்றத்தில் ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் இன்று (மார்ச் 15) தாக்கல் செய்தார். 12500 cr allocate for food safety in tn agri budget
அப்போது புதிய 6 சேமிப்பு வளாகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்து உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், “தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாத்திட “ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது” என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், இரண்டு இலட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூறை அமைப்புடன் கூடிய 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 49 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூறை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும் ஏற்படுத்தப்படும்.
நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக அடுக்கி வைப்பதற்கு, 25,000 இரும்பு இடைச்செருகுக் கட்டைகளும், நெல்லின் ஈரப்பதம் கண்டறிவதற்கான 2,500 டிஜிட்டல் கருவிகளும், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு டிராக்டருடன் கூடிய நெல் உலர்த்தும் இயந்திரமும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
இத்திட்டம் பல்வேறு நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து 480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
2025-2026-ஆம் ஆண்டில், உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு, 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.