”எங்களுக்கு பாராட்ட மனமில்லையா?”: எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி!

Published On:

| By Kavi

VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, 125 நாட்களாக வேலை நாட்களை உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் .

ADVERTISEMENT

மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை.

இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு பச்சை துண்டு பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது ?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் இன்று (டிசம்பர் 23) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? mgnrega திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?

உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது.

மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே… என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே. மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே?

டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம். வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய UPA அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்” என்று விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share