சிப்ஸ் திருடியதாக பொது இடத்தில் கடை உரிமையாளர் கண்டித்ததால், 12 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. 12 year old boy suicide after theft charge
மேற்கு வங்க மாநிலம் பாசிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள பன்சுகுராவை சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். 12வயது சிறுவனான இவர் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அவர் நேற்று (மே 22) மாலை பன்சுகுரா பகுதியில் உள்ள கோசைபர் பஜாரில் உள்ள ஒரு கடையில் இருந்து காசு கொடுக்காமல் ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த கடை உரிமையாளர் சுபாங்கர் தீட்சித், அவரை துரத்தி பிடித்து, பஜாரில் அனைவர் முன்னிலையிலும் திருடியதாக குற்றஞ்சாட்டி கன்னத்தில் அறைந்தார்.
அதற்கு தாஸ், வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாகவும், தான் திருடவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் சுபாங்கர் அதை கேட்காமல், தோப்புக்கரணம் போடும்படி கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுவன் கிருஷ்ணேந்து தாஸ், தனது வீட்டிற்குத் திரும்பி, தனது அறையின் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு பின்னர் திறக்கவில்லை.
சிறுவனின் அறை திறக்காமல் இருப்பதை அறிந்து பதறிய அவரது தாயார் அண்டை வீட்டாரோடு சேர்ந்து கதவை உடைத்துத் திறந்தார். அப்போது, பாதி காலியான பூச்சிக்கொல்லி பாட்டில் அருகில் கிடந்த நிலையில், தாஸின் வாயிலிருந்து நுரை வழிந்தது.
மேலும் அவர் அருகில், பெங்காலி மொழியில் எழுதப்பட்ட கடிதம் கிடந்தது. அதில், “அம்மா, நான் திருடன் இல்லை. நான் சிப்ஸ் திருடவில்லை. இதுவே என் இறுதி வார்த்தைகள். இந்த செயலுக்கு (பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டதற்கு) என்னை மன்னியுங்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே உடனடியாக அவரை அருகிலிருந்த தம்லுக் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுவன் தாஸின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிப்ஸ் கடை உரிமையாளர் சுபாங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், தலைமறைவான சுபாங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050 என்ற எண்ணுக்கு அழைக்கவும்)