சென்னை விமான நிலையத்தில் இன்று(நவம்பர் 20) 12 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில், பயணிகள் குறைவு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படு வருகின்றன. கடந்த 10ஆம் தேதி டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிருந்து வரவிருந்த மற்றும் அங்கு புறப்பட இருந்த 9 விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன.
ரத்து செய்யப்பட்ட 9 விமானங்களில் 7 விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவை.
அதேபோல் கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னையிலிருந்து இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குப் புறப்பட இருந்த 4 விமானங்கள், அங்கிருந்து வரவிருந்த 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதற்கும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், யு.எஸ் பாங்க்ளா உள்ளிட்ட நிறுவனத்தின் விமானங்கள் அடக்கம்.
இந்த நிலையில்தான் இன்று (நவம்பர் 20) பெங்களூரு, புவனேஷ்வர், கொல்கத்தா, சிலிகுரி உள்ளிட்ட நகரங்களுக்குப் புறப்பட இருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் அங்கிருந்து புறப்படவிருந்த 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
ரத்து செய்யப்பட்ட 12 விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவையும் நிர்வாக காரணத்தால்தான் ரத்து செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி அடிக்கடி சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கோபம் அடைந்துள்ளனர்.
மேலும், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பணத்தை திரும்பப் பெற விரும்பும் பயணிகளுக்கு திருப்பித் தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவோம்” – திமுக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்!