மகளிர் உரிமைத் தொகைக்கு தமிழகம் முழுவதும் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1 கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மேல்முறையீடு செய்பவர்களுக்காக உதவி மையங்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்டோபர் 26) ஆய்வு செய்தார்.
அப்போது நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது மேல்முறையீடு செய்திருந்த 3 பேரை தொடர்பு கொண்டு மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்ட காரணங்களைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது.
தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம்.
அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம்.
அப்போது, அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்துக் கூறிய போது, அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை ஏற்றுக் கொண்டனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!










