ADVERTISEMENT

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள 11 மாவட்டங்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

11 districts in Tamil Nadu likely to receive rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, இன்று (அக்டோபர் 26) காலை 5.30 மணி அளவில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 8.30 மணி அளவில் அதே பகுதிகளில், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 780 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ஆம் தேதி காலை தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ADVERTISEMENT

நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையிலும், பிறகு தெற்கு-தென்மேற்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.

7 நாட்களுக்கான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

26-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

27-10-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

28-10-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

29-10-2025 முதல் 01-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share