11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: சபாநாயகருக்கு நோட்டீஸ்!

Published On:

| By Balaji

ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதுபோலவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகர் அதிகாரத்தில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் வாக்களித்த பன்னீர்செல்வம், செம்மலை, மாஃபா பாண்டியராஜன், நடராஜ், மனோரஞ்சிதம், சின்னராஜா, மனோகரன் உள்ளிட்ட ஏழு பேரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுகவும் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சட்டப்பேரவை தலைவர், சட்டப்பேரவைச் செயலாளர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கும், திமுக தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எதிர் தரப்பினருக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர். 4 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். தரப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும், துணை முதல்வர், அமைச்சர் போன்ற பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அதையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறியிருந்தோம். 4 வாரங்களுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share