செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இயல்பை விட 109 சதவிகிதம் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை வெள்ள பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இமயமலையை ஒட்டிய ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற பகுதிகளில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு அபாயங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மொஹபத்ரா ஞாயிறன்று அளித்த பேட்டி ஒன்றில், நாட்டின் கடந்த ஜூலை 1 ம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ம் தேதி வரை 743.1 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது நீண்ட கால சராசரியை விட 6 சதவிகிதம் அதிகமாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் 268.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது சராசரியை விட 5.2 சதவீதம் அதிகமாகும். வடமேற்கு இந்திய பகுதிகளில் 265 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவே அதிகபட்ச மழை அளவு.
தென் தீபகற்ப பகுதியில் ஆகஸ்ட் மாதம் 250 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தற்போதைய பருவ காலத்தில் கடந்த மூன்று மாதங்களுமே அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது.
செப்டம்பர் மாதம் அதிக மழை
இதே சமயம் வரும் செப்டம்பர் மாதம் நீண்ட கால சராசரியை விட 109 சதவிகிதம் அதிக மழை பொழிவு இருக்கும். வட கிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் கடைக்கோடி தென் தீபகற்ப பகுதிகளைத் தவிர்த்து நாடு முழுவதும் அதிக அளவில் மழைப்பொழிவு காணப்படும்.
பேரிடர் எச்சரிக்கை
உத்தரகாண்ட் பகுதியில் திடீர் வெள்ளம் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது பொதுவாக வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை வழக்கமாக ஒடிசா வழியாக கடந்து செல்லும். ஆனால் இந்த முறை மேற்கு வங்கம் ஜார்கண்ட் உத்தரப்பிரதேசம் பகுதிகள் வழியாக கடந்து சென்றன. இதன் தாக்கத்தால் வடமேற்கு இந்தியாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல் பிரதேசம் உத்தரகண்ட் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அடுத்தடுத்து மேக வெடிப்புகளால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் சிறிய அளவிலான மேக வெடிப்புகள் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பகல் நேரங்களில் மத்தியில் இருக்கும் வடமேற்கு தென்னிந்தியா பகுதிகளில் சராசரிக்கும் குறைவாக வெப்பநிலை இருக்கலாம். வடகிழக்கு இந்தியா மற்றும் சில வட மேற்கு பகுதிகள் மேற்கு கடற்கரை பகுதிகளில் சராசரியை விட சற்று அதிக வெப்ப நிலை இருக்கக் கூடும்
இரவு நேரத்தை பொருத்தவரை பெரும்பாலான பகுதியில் சராசரி மற்றும் சராசரிக்கு மேலாக வெப்பநிலை இருக்கும். வட மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் சராசரிக்கும் கீழாக வெப்பநிலை இருக்கலாம். அதே சமயம் தென்னிந்தியாவில் அதிக பாதிப்புகள் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
