மோடிக்கு 108 கேள்விகள்- அமைச்சர் மனோ தங்கராஜின் அதிரடிப் புத்தகம்!

By Aara

|

Published on 11 Mar 2024, 3:13 PM

108 Questions for Modi

‘மன் கி பாத் – மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்” என்ற தலைப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதி மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்த  புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 10)  கன்னியாகுமரியில் நடந்தது.

மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட, முதல் பிரதியை மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பெற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

நிகழ்வில் பேசிய பீட்டர் அல்போன்ஸ்,

“நாடாளுமன்றத் தேர்தலுக்காக  காத்துக் கொண்டிருக்கிறோம். மனோ தங்கராஜ் அவர்கள் அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது இதுதான் நிரந்தரம் என்று எண்ணாமல், தனது பணி நெருக்கடிகளுக்கு  இடையே தன்னை ஒரு சமூகப் போராளியாக அடையாளப்படுத்திக் கொண்டு இந்த புத்தகத்தை படைத்திருக்கிறார். இதை ஜெயரஞ்சன் சொன்னதுபோல எல்லாரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

108 Questions for Modi

நிகழ்வில் பேசிய புத்தகத்தை எழுதிய அமைச்சர் மனோ தங்கராஜ்,

ADVERTISEMENT

“இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இப்படி ஒரு புத்தகம் வெளியிடலாம் என்று மனதில் தோன்றியது. தரவுகளை சேகரித்து புத்தகத்தை எழுதி மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்களிடம் கொடுத்து இது சரியாக இருக்குமா என்று கேட்டேன். அவரும் பார்த்துவிட்டு சரியாக இருக்கிறது. நீங்கள் அமைச்சராக இருக்கிறபடியால் கட்சித் தலைமையிடமும் தெரிவித்து ஒப்புதல் பெறுங்கள் என்று கூறினார். வழக்கறிஞரிடமும் ஆலோசனை பெறுங்கள் என்று சொன்னார்.

நான் புத்தகத்தின் நகலை தலைவர் முதல்வரிடமும் கொடுத்து  இதுகுறித்து தெரிவித்தேன். அவரும் இதை வெளியிடலாம் என்று ஒப்புதல் அளித்தார்.

உடனடியாக அவரிடத்திலே கேட்டு மின்னம்பலம் பதிப்பகத்தைத் தொடர்புகொண்டோம். அவர்கள் உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். காலம் குறைவாக இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் வெளியிட வேண்டும் என்று விரைவாக செயல்பட்டோம்.

இந்த புத்தகத்தின் நோக்கம் என்னவென்றால்… இந்த நாட்டின் பிரதமர்கள், முதல்வர்கள் எப்போதுமே பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள். கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள். பண்டித நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரையிலும் இருந்த பிரதமர்கள்,  பல நூறு பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போதைய பிரதமரான மோடி என்ற மனிதர் இதுவரை பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததே இல்லை. நாடாளுமன்றத்துக்காவது வந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தாரா என்றால் அதுவும் இல்லை.

108 Questions for Modi

மணிப்பூர் பற்றி எரிகிறது.  அங்கே பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்படும்போது…  மோடி என்கிற மனிதர் அவர் வாய் மூடி மௌனியாக இருந்தார். பிரதமரை பேச வைப்பதற்காகவே நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவர் மன்கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில்தான் பேசுவார். அதை நாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒன் சைடு டிராபிக் மாதிரி அவர் மட்டும்தான் பேசுவார். அவரிடம் கேள்விகளே கேட்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. மன்கி பாத் என்பது மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்காக அல்ல. மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கத்தான். ஆபரண வார்த்தைகளை தயாரித்து பேசுவார். அவரது உடை எப்படி இருக்க வேண்டும், உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அவருக்கு சொல்லித் தரப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட பொய்களை அழகான வார்த்தைகளால் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

அதனால்தான் மன்கி பாத் நிகழ்வில் அவர் பேசாத, அவரிடம் கேட்கப்படாத கேள்விகளை புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். ஒரு சாமான்ய குடிமகன் ஒரு பிரதமரிடம் கேட்கும் கேள்விகள்தான் இவை. தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த புத்தகம் நமக்கு பயன்படும்” என்று பேசினார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

இந்த நிகழ்வில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார்,  முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் குமரி மாவட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

–வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“புதிய சட்டத்தின் படி கூடவே கூடாது” : தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு!

தேர்தல் பத்திரங்கள்.. எஸ்பிஐ வங்கிக்கு கெடு: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Aara

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel