1982-ம் ஆண்டு முதல் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கவுசாம்பி மாவட்ட சிறையில் 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த 104 வயது முதியவர் லகான் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். 104-Year-Old Man Released from UP Jail
உ.பி. கவுசாம்பி மாவட்டத்தில் 1921-ம் ஆண்டு பிறந்தவர் லகான். 1977-ம் ஆண்டு பிரபு சரோஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் லகான் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் 1982-ம் ஆண்டு உ.பி. மாநிலம் பிரக்யாராஜ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த ஆயுள் தண்டனை தீர்ப்புக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும் போதே 3 பேர் உயிரிழந்துவிட்டனர்.
43 ஆண்டுகள் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார் லகான். அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே 2-ந் தேதி லகானை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து லகான் விடுதலை செய்யப்பட்டார். 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த லகான் 104 வயதில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்திய நீதித்துறை வரலாற்றில், தாமதிக்கப்பட்ட நீதியின் சாட்சியமாக இருக்கிறார் லகான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.