4 நாட்களில் அனுமதி.. விதி மீறி விஜய் கூட்டத்தில் 10,000 பேர் பங்கேற்பு- வேலூர் போலீஸ் விளக்கம்

By Mathi

|

Published on 24 Feb 2026, 12:05 AM

Vellore Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற வேலூர் கூட்டத்துக்கு 4 நாட்களிலேயே அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் தவெகவினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர் என்று வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை: 22.02.2026 அன்று, தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, வேலூர் மாவட்டத்தின் தவெக கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியின் தலைவர் வருகைக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அனுமதி கோரி போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும், கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த 28.01.2026-ம் தேதி, தவெக கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை 08.02.2026 அன்று நடத்துவதாகவும், அதில் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து காவல்துறை சார்பில் 30.01.2026 அன்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசாணை எண். 05-ன் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் 05.02.2026 அன்று தவெக நிர்வாகம் சார்பாக “சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாள் தற்போதைக்கு தள்ளிவைக்கப்படுவதால், நாங்கள் எங்கள் தலைமையிடம் கலந்து பேசி மீண்டும் மனு கொடுக்க உள்ளோம்” என மனு அளித்தனர்.

மீண்டும், 06.02.2026-ம் தேதி அன்று தவெக நிர்வாகம் சார்பாக மேற்படி நிகழ்ச்சியை 23.02.2026 அன்று நடத்துவதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என மனு அளித்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது.

18.02.2026 அன்று தவெகவினர் அளித்த மனுவில் “வேலூர் மாவட்டத்தில் 23.02.2026 அன்று எங்கள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு 06.02.2026 அன்று கடிதம் கொடுத்திருந்தோம், அந்த நிகழ்வில் பொதுமக்கள் 25,000 கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தோம். இந்த சந்திப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 4900 பேர் கலந்துகொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை சார்பில் 19.02.2026-ம் தேதியன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் அடங்கிய பதில் மனுவினை தமிழக வெற்றி கழகத்தினர் 20.02.2026-ம் தேதி சமர்ப்பித்தனர்.

தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்திருந்த போதிலும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்தங்களை பரிசீலனை செய்தும் 22.02.2026-ம் தேதி காவல்துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில்

எவ்வித காலதாமதமும் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.

தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பின் போது காவல்துறை தரப்பில் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகத்தான் காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 23.02.2026-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயலானது மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண். 05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.

எனினும் காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel