10,000 தொண்டு நிறுவனங்கள் உரிமம் இழக்கும் அபாயம்!

Published On:

| By Balaji

இந்தியாவில் பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் பல முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இதனால், அந்நிறுவனங்களுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், வரவு செலவு கணக்கைச் சமர்ப்பிக்காத தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பண உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் ஜூன் 14ஆம் தேதிக்குள் வரவு செலவு கணக்கைச் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும், இதுவரை 8,267 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே வரவு செலவு கணக்கைச் சமர்ப்பித்துள்ளன. ஆனால், 10,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் வரவு செலவு கணக்கைச் சமர்ப்பிக்கவில்லை. இந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டிலிருந்து பண உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் எஃப்.சி.ஆர்.ஏ-யின் (வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 10,256 நிறுவனங்கள் வரவு செலவு கணக்கைச் சமர்ப்பிக்கவில்லை. தற்போது, அந்த நிறுவனங்கள் குறித்து சோதனை நடைபெறுகிறது. விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், இணையச்சேவை கொண்ட வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கும்படி நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு முறைகேடாகச் செயல்பட்டு வந்த 20,000 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share