தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025ஐ வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) தாக்கல் செய்தார். 1000 Farmer Welfare Service Centers
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி காலையில், கலைஞரின் கோபாலபுரம் இல்லம் மற்றும் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் உட்பட அமைச்சர்களும் திமுக எம்.எல்.ஏ.க்களும் பச்சைத் துண்டு அணிந்து பேரவைக்கு வந்தனர்.
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், “கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் அவர், “ஆண்டுதோறும் 4000 வேளாண் பட்டதாரிகள்,600க்கும் மேற்பட்ட பட்டயதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களின் படிப்பு விவசாயிகளுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திடும் வகையில் “1000 உழவர் நல சேவை மையங்கள்” அமைக்கப்படும்.
ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான இந்த மையங்கள் அமைத்திட 30 லட்சம் மானியமாக ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
முதல்வர் மருந்தகம் போன்று இந்த மையங்கள் அமைக்கப்படும். இதற்காக 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் வேளாண் இடு பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
தமிழ்நாட்டில் டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் சராசரியாக 34 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கார், குருவை, சொர்ணாவாரி போன்ற பருவங்களில் நெல் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு உழவர்களுக்கு வழங்கப்படும்.
நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.102 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
டெல்டா மாவட்டங்களில் 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உணவு தானிய உற்பத்தியை அதிகரித்திட சிறப்பு தொகுப்பு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
5ஆவது ஆண்டாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1000 Farmer Welfare Service Centers