“மத்திய அரசு வேலை, அதுவும் ஆசிரியர் பணி என்றால் சும்மாவா? கைநிறைய சம்பளம், கௌரவமான வாழ்க்கை…” என்று கனவு காணும் லட்சக்கணக்கான பி.எட் பட்டதாரிகளுக்கு ஒரு முக்கியச் செய்தி. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா (KVS) பள்ளிகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்தியக் கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் சொன்ன கணக்கு:
மத்திய அமைச்சர் அளித்துள்ள தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மொத்தம் 10,434 கற்பித்தல் பணியிடங்கள் (Teaching Posts) காலியாக உள்ளன. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் சூழலில், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலேயே இவ்வளவு இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்தெந்தப் பதவிகள் காலி?
வெறும் ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகத்தைத் தலைமை தாங்கும் முதல்வர் பணியிடங்களும் அதிகளவில் காலியாக உள்ளன.
- முதல்வர் (Principal): 417 இடங்கள்.
- துணை முதல்வர் (Vice Principal): 196 இடங்கள்.
- முதுகலை ஆசிரியர்கள் (PGT): 3,382 இடங்கள்.
- பட்டதாரி ஆசிரியர்கள் (TGT): 3,584 இடங்கள்.
- இடைநிலை ஆசிரியர்கள் (PRT): 2,855 இடங்கள்.
இசை ஆசிரியர்கள் மற்றும் பிற சிறப்புப் பிரிவுகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏன் இவ்வளவு காலியிடங்கள்?
இதற்குப் பதிலளித்த அமைச்சர், “ஓய்வு பெறுதல் (Retirement), ராஜினாமா, பதவி உயர்வு மற்றும் புதிய பள்ளிகள் திறப்பு ஆகியவற்றால் தொடர்ந்து காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இது ஒரு தொடர் நடைமுறை. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று விளக்கம் அளித்தார். மேலும், தற்காலிகமாக மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்களின் எதிர்பார்ப்பு:
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கேந்திரிய வித்யாலயா சங்கதன் மூலம் சுமார் 13,000 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், இன்னும் 10,000 இடங்கள் காலியாக இருப்பது, அடுத்த மெகா ஆட்சேர்ப்புக்கான (Next Recruitment Drive) அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரிகள், “எப்போது அறிவிப்பு வரும்?” என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
