தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனையடுத்து வெளியூரில் இருக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப கடந்த 2 நாட்களாக ரயில், பேருந்துகளில் படையெடுத்து வருகின்றனர்.
அதோடு நகரங்களில் உள்ள சந்தைகளிலும் தீபாவளியையொட்டி புத்தாடைகள், பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளியன்று பலரும் அசைவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டுச்சந்தைகளில் விற்பனை களைக்கட்டி வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
இதற்கிடையே தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் அரிசி ஆலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 100க்கும் அதிகமான ஆடுகள் சிக்கி உயிரிழந்துள்ளன.
தீபாவளி விற்பனைக்காக வளர்த்து வந்த சுமார் 30 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் கொத்தாக உயிரிழந்த நிலையில், அவற்றின் உரிமையாளர் முருகன் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
