100 நாள் வேலை ஊதியம் உயர்வு : தமிழகத்துக்கு எவ்வளவு?

Published On:

| By Kavi

100 days work salary hike

100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 100 days work salary hike

வறுமையை போக்கும் வகையிலும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும்  மத்திய அரசு சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

யுபிஏ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போதைய மத்திய பாஜக அரசு ஆர்வம் காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய  ஊதிய தொகையான 4034 கோடி ரூபாயை மத்திய அரசு கொடுக்காமல் வைத்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி,  “இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை தாமதமாக வழங்கக் கூடாது. இதை, 15 நாட்கள் தாமதம் செய்தால் அதற்குண்டான வட்டியை சேர்த்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது விதி. எனவே தமிழகத்துக்கு 5 மாதங்களாக ரூ.4,034 கோடி வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு வட்டி போட்டுத் தருவீர்களா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசனி,  ” தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.7,300 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி ஆகும். உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடி. எனவே இந்த மாநிலத்தை விட தமிழ்நாடு அதிக நிதியை பெற்றிருக்கிறது. எனவே நிதி கொடுக்கவில்லை என்ற  கேள்விக்கு இங்கு இடமில்லை” என்று பதிலளித்தார்.

இதற்கிடையே 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நாளை திமுக தலைமை போராட்டம் அறிவித்திருக்கிறது.

இந்தநிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி  தமிழ்நாட்டுக்கு 17 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ. 319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் தற்போது ரூ.336 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்றும், வருகிற ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஹரியானாவுக்கு ரூ.26 உயர்த்தப்பட்டுள்ளது.  அந்த மாநில தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.400 வழங்கப்படும். 

உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 15 ரூபாயும்,  கேரளாவுக்கு 23 ரூபாயும், கர்நாடகாவுக்கு 21 ரூபாயும்,  தெலங்கானாவுக்கு 7 ரூபாயும்,  ஆந்திராவுக்கு 7 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. 100 days work salary hike

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share