100 நாள் வேலை… மத்திய அரசை கண்டித்து 389 இடங்களில் ஆர்ப்பாட்டம் – ஸ்டாலின் பதிவு!

Published On:

| By Kavi

100 நாள் வேலைத் திட்டத்துக்கு பெயர் மாற்றும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அந்தச் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவையும் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று (டிசம்பர் 24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

100 நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு முழுமையாக நிதியளித்து வந்த நிலையில் தற்போது 40 சதவிகிதம் மட்டும் வழங்கப்படும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

அதன்படி இன்று (டிசம்பர் 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். “காந்தியின் பெயரை நீக்குவது அவரது பாரம்பரியத்தையும், அவர் முன்னெடுத்த கிராம சுயாட்சித் தத்துவத்தையும் அழிப்பதற்கான முயற்சி” என்று அவர்கள் கூறினார்.

ADVERTISEMENT

வைகோ பேசுகையில், “நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு காந்தியின் பெயரை எந்த அடிப்படையில் நீக்கினார்கள்? அன்று காந்தியை கோட்சே கொன்றது போல, தற்போது மோடி கொன்றுள்ளார்” என்று கண்டனம் தெரிவித்தார்.

கி.வீரமணி பேசுகையில், ““உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கு முன்னுதாரணமான திட்டம், 100 நாள் வேலைத் திட்டம் என சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட திட்டத்தையே கொச்சைப்படுத்தி, ரத்து செய்கிறார்கள் என்றால் அதுதான் பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ். அதை எதிர்ப்பவர்கள்தான் திராவிட சிந்தனையாளர்கள். காரணம், இது சமதர்ம மண்” என்றார்.

“இந்தியாவில் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கு சாவு மணி அடித்து, ஒட்டு மொத்த நாட்டையே பெரிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்க முயற்சிக்கிறது மோடி அரசு. இதற்கு விரைவில் சரியான பதிலடியை மக்கள் கொடுக்க இருக்கிறார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

“காந்தியின் பெயரை மாற்றிவிட்டு, 125 நாட்கள் என்று சொல்கிறார்கள். இதுவரை 100 நாட்களே வேலை தராத ஒன்றிய அரசு, இப்போது திசை திருப்பலுக்காக 125 நாட்கள் என்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசின் ஒரே நோக்கம் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிப்பதுதான்” என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசினார்.

காஞ்சிபுரம் படைப்பையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் எம்.பி.டி.ஆர்.பாலு, “ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களிலும் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது. மக்களுக்கு விரோதமான சட்டங்களையும், திட்டங்களையும் செயல்படுத்தும் பா.ஜ.க அரசையும், அவர்களுக்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் வீழ்த்த வேண்டும்” என்றார்.

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்துகொண்டார்.

கன்னியாகுமரியில் கொட்டாரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  விஜய் வசந்த் எம்பி பாஜக அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினார்.

மொத்தமாக தமிழகம் முழுவதும் 389 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதன் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள் முதல்வர் ஸ்டாலின், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!

இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share