ADVERTISEMENT

பத்தாவது வருடத்தில் பா.ரஞ்சித்

Published On:

| By Selvam

அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலமாக 2012 இல் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். அவர் சினிமாவிற்கு வந்து 10 வருடங்கள் ஆனதைத் தொடர்ந்து #10 YearsofPaRanjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ஆகஸ்ட் 15, 2012-ம் ஆண்டு அட்டக்கத்தி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ADVERTISEMENT

காதல் என்பது ஒரு செடியில் ஒரே ஒரு முறை தான் பூக்கும் என்று தமிழ் சினிமாவில் கதைகள் வந்து கொண்டிருந்த நிலையில், காதல் என்பது ஒருவருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம் என்ற புதுமையான கதை சொல்லல் முறையை இயக்குனர் ரஞ்சித் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

இந்தப் படத்தில் ரூட்டு தல, சென்னை கல்லூரி மாணவர்களுக்குள் பேருந்தில் ஏற்படும் பிரச்சனைகள், மாட்டுக் கறி அரசியல் குறித்து பேசியிருப்பார்.

ADVERTISEMENT

2014-ம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். நடிகர்கள், கார்த்தி, கேத்ரின் தெரேசா, கலையரசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

ஒரு சுவரை மையப்படுத்தி கதைக்களம் அமைந்திருக்கும். சுவரில் தங்களுடைய படத்தை வரைவது குறித்து இரண்டு தரப்பினருக்கிடையே இருக்கும் அதிகார அரசியல் குறித்து பேசியிருப்பார்.

ADVERTISEMENT

வட சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால், வட சென்னை மக்களுடைய வாழ்வியலையும் அவர்களுடைய அரசியலையும் படத்தில் காட்டியிருப்பார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், கமர்ஷியலாகவும் மெகா ஹிட் அடித்தது.

மெட்ராஸ் படத்தின் வெற்றி மூலம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு  ரஞ்சித்திற்கு கிடைத்தது. தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளர்களைப் பற்றி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் ரஞ்சித்திற்கு மீண்டும் வாய்ப்பளித்தார் ரஜினிகாந்த். மும்பையின் தாராவி நிலப்பரப்பில் உள்ள தமிழர்கள் வாழ்வியலையும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் காலா என்ற திரைப்படத்தின் மூலம் ரஞ்சித் பேசியிருப்பார். இந்தப் படம் வெற்றி அடைந்தது.

தொடர்ந்து ஆர்யா, துஷாரா விஜயன் நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ம் ஆண்டு  ஓஓடியில் வெளியானது. இந்தப் படம் ரஞ்சித்திற்கு வெற்றியைக் கொடுத்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாக உள்ளது. தன் பால் ஈர்ப்பாளர்கள் குறித்து இந்தப் படம் பேசுகிறது. அடுத்ததாக நடிகர் விக்ரமுடன் இணைந்துள்ளார் ரஞ்சித். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

சினிமா மட்டுமல்லாது நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் அம்பேத்கரின் அரசியலை இயக்குனர் ரஞ்சித் பேசி வருகிறார். நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

நீலம் தயாரித்து வெளிவந்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் திரை பிரபலங்கள், சினிமா ஆர்வலர்கள் இயக்குனர் ரஞ்சித் சினிமாவிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகும் நிலையில் #10 YearsofPaRanjith என்ற ஹேஷ்டாக் பதிவிட்டு வருகினறனர்.

செல்வம்

ஸ்ரீ தேவி பிறந்த நாள்: மகள் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share